Thursday, January 23, 2014

மாலைதீவு ஜனாதிபதிக்கு செங்கம்பள வரவேற்பு!

Thursday, January 23, 2014
இலங்கை::இலங்கைக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு மாலைதீவு ஜனாதி பதி அப்துல்லா யாமீன் அப்துல் கையூமிற்கு ஜனாதிபதி செயலகத்தில் பெரு வரவேற் பளிக்கப்பட்டது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரமாண்டமான முறையில் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். நேற்றுக்காலை ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தந்த மாலைதீவு ஜனாதிபதிக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டு 21 பீரங்கி வேட்டுக்களும் தீர்க்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து இரு நாட்டுத் தலைவர்களுக்கிடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடை பெற்றதுடன், இரு நாடுகளுக் கிடையிலான மூன்று முக்கிய ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டன.
இரு நாட்டுத் தலைவர்களுக் கிடையிலான பேச்சுவார்த்தையின் நிறைவில் இலங்கை – மாலைதீவு தூதுக்குழுக்களுக்கிடையிலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இதன் போது பல்வேறு துறைகள் தொடர்பில் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கடந்த நவம்பர் மாதம் மாலைதீவில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பெற்றுக்கொள்ளப்பட்ட வெற்றி, அதன் மூலம் அந்நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதியான அரசியல் மாற்றம் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மாலைதீவு ஜனாதிபதிக்கு தமது மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

உங்கள் காத்திரமான வழிகாட்டலின் கீழ் மாலைதீவு மக்களுக்கு சுபீட்சம் கிட்டியுள்ளது. நாடு சிறந்த பொருளாதார ஸ்திரத்தைப் பெற்றுக்கொள்ளும் என்பது எனது நம்பிக்கை” என தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, “தெற்காசியாவிலுள்ள இரு தீவு நாடுகள் என்ற வகையில் பண்பாடு மற்றும் கலாசார சம்பிரதா யங்களில் இரு நாடுகளுக்கும் பொது மரபுரிமையைப் பகிர்ந்து கொள்கிறோம்” எனவும் தெரிவித்தார்.

உயர்மட்ட அரசியல் அதிகாரிகளின் விஜயங்கள் மூலம் இரு நாடுகளுக்கிடையில் நட்புறவுப் பிணைப்பு மேலும் பலம்பெறும் எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
இலங்கைக்கும் மாலைதீவுக்குமிடையிலான வரலாற்று உறவுகளை நினைவுறுத்திய மாலைதீவு ஜனாதிபதி: பெரும்பாலான மாலைதீவு வாசிகள் இலங்கையைத் தமது இரண்டாவது வீடு என உணர்கின்றனர் என சுட்டிக்காட்டினார். தற்போது மாலைதீவு நாட்டினர் 9,000 இற்கும் மேற்பட்டோர் இலங்கையில் வாழ்கின்றனர்.

இலங்கையானது எப்போதும் சகோதரனாகவும் நண்பனாகவும் இருந்து வந்துள்ளது என குறிப்பிட்ட மாலைதீவு ஜனாதிபதி இந்த அளவற்ற நட்புறவுக்காக நாம் நன்றி தெரிவிக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.
சர்வதேச அரங்குகளில் மாலைதீவு இலங்கைக்கு வழங்கி வரும் தொடர்ச்சியான ஒத்துழைப்புக்காக ஜனாதிபதி அவர்கள் நன்றி தெரிவித்துக்கொண்டார். இதற்குப் பதிலளிக்கும் வகையில் கருத்துத் தெரிவித்த மாலைதீவு ஜனாதிபதி: தேவையான சந்தர்ப்பங்களில் நாம் ஒருவருக்கொருவர் உதவாவிட்டால், நாம் அயலவர்களாக இருப்பதில் பலன் இருக்க முடியாது. “நாங்கள் உங்களுக்கு எப்போதும் உதவுவோம்” என்றார்.

இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி தற்போதுள்ள சமாதானத்தின் நிலைபேறான தன்மை தொடர்பில் கருத்துத் தெரிவித்த மாலைதீவு ஜனாதிபதி, இலங்கை மக்கள் அனுபவிக்கின்ற வெற்றி, அவர்கள் அனுபவிக்கின்ற மகிழ்ச்சி தொடர்பில் நாம் எமது பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம். மாலைதீவில் உள்ள நல்லவற்றை இலங்கைக்கு வழங்குவோம். அதேபோன்று இலங்கையின் சமாதானமும் சுபீட்சமும் மாலைதீவுக்கு நன்மையளிக்கும் எனவும் தெரிவித்தார்.

இரு நாடுகளினது தூதுக்குழுவினரும் இரண்டு நாடுகள் சம்பந்தப்பட்ட பல்வேறு துறைகள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடியுள்ளதுடன், சுகாதாரம், சுற்றுலாத்துறை, விமான சேவைகள், குடிவரவு, பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் இதன் போது முக்கியத்துவம் பெற்றன.
இலங்கையில் தற்போது வாழ்கின்ற மாலைதீவு மக்களுக்கு கல்வி, சுகாதாரம் போன்ற வசதிகளை விரிவுபடுத்த வேண்டுமென மாலைதீவு ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

கடற்றொழில் துறை தொடர்பில் இதன் போது விரிவாகக் கலந்துரையாடப் பட்டதுடன், அரபுக் கடலில் தடையின்றி மீன்பிடி படகுகளை செலுத்துவதற்கு இலங்கை மீனவர்களுக்கு அனுமதி வழங்குமாறு இலங்கை தூதுக்குழுவினர் மாலைதீவிடம் கேட்டுக்கொண்டனர்.

சர்வதேச கடல் சட்டங்களுக்கு அமைவாக இலங்கை மீனவர்கள் மாலைதீவு கடலில் மீன்பிடிக்கமாட்டார்கள் என்பதைக் குறிப்பிட்ட அவர்கள், அதனூடாக படகுகளை செலுத்த அனுமதி கோரினர். இலங்கையில் தயாரிக்கப்பட்ட உயர்தர படகுகளை தற்போது சீசெல்ஸ் போன்ற நாடுகள் கொள்வனவு செய்கின்றன. இலங்கை படகுகளை கொள்வனவு செய்வதில் மாலைதீவு கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

இருதரப்புப் பேச்சுவார்த்தைகளையடுத்து, இரு நாடுகளுக்குமிடையிலான நட்புறவைப் பலப்படுத்தும் மூன்று ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.
இதற்கிணங்க தொழில் பயிற்சி மற்றும் இளைஞர் அபிவிருத்திக்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் இலங்கையின் சார்பில் அமைச்சர் டளஸ் அழகப்பெருமவும் மாலைதீவு சார்பில் அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் திருமதி நுன்யா மஹ்மூனும் கைச்சாத்திட்டனர்.

விளையாட்டுத்துறையில் இருதரப்பு கூட்டுறவு தொடர்பான உடன்படிக்கையில் இலங்கையின் சார்பில் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவும் மாலைதீவின் சார்பில் அந்நாட்டு அமைச்சர் மொஹமட் ஹுசைன் ஷெரீப்பும் கையொப்பமிட்டனர்.

சர்வதேச குற்றச் செயல்களைத் தடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இலங்கையின் சார்பில் பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்கக்கோணும் மாலைதீவின் சார்பில் அந்நாட்டு பொலிஸ் ஆணையாளர் ருவைட் வாஹிட்டும் கையொப்பமிட்டனர்.

அமைச்சர்கள் ஜீ.எல். பீரிஸ், பசில் ராஜபக்ஷ, ஏ.எச்.எம். பெளஸி, மைத்திரிபால சிறிசேன, டளஸ் அழகப்பெரும, ரிசாட் பதியுதீன், ராஜித சேனாரட்ன, பந்துல குணவர்தன, மஹிந்தானந்த அலுத்கமகே, மாலைதீவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் சரத் சந்திரதேவ, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் காமினி செனரத் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் மேற்படி இலங்கை தூதுக்குழுவில் பங்கேற்றிருந்தனர்.

No comments:

Post a Comment