Saturday, January 18, 2014

இலங்கைக்கு எதிராக செயற்படும் புலம்பெயர்ந்தவர்கள் தொடர்பில் அரசு தீவிர கண்காணிப்பு: விமல் விரவன்ச!

Saturday, January 18, 2014
இலங்கை::இலங்கைக்கு எதிராகச் செயற்படும் புலம்பெயர்ந்தவர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களினூடாக நிதிபெறும் அமைப்புகள் போன்ற ஒவ்வொருவரின் நகர்வையும் அரசு தீவிரமாகக் கண்காணித்து வருவதாகத் தெரிவித்த வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் விமல் வீரவன்ச, யுத்தத்தில் இராணுவம் செய்த யுத்த மீறல்கள் தான் என்னவென்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
திருகோணமலை சேருவிலவில் சோமவதி ஜனசெவன வீடமைப்புக் கிராமத்தை புதன்கிழமை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த விமல் வீரவன்ச மேலும் கூறியதாவது,
 
புலிகள், அரந்தலாவையில் பௌத்தமதக் குருமார்களையும், காத்தான்குடி பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்களையும் கொலை செய்தனர். கண்டி தலதா மாளிகைக்கு குண்டு வைத்து தகர்த்தனர். கெப்பிட்டிக் கொல்லாவையில் வாழ்ந்த அப்பாவி மக்களை கொலை செய்தார்கள்.
 
இங்கு வந்திருந்த அமெரிக்க தூதுவர் ஸ்ரீடீபன் ரெப் அன்று இவ் விடயங்களை சர்வதேச ஊடகங்களில் அறிந்திருக்கவில்லையா ? அவர் இவ்வாறான இடங்களையும் ஏன் பார்வையிடவில்லை ? இவ்வாறான விடயங்களை ஏன் மனித உரிமை அறிக்கையில் சமர்ப்பிக்கவில்லை ?
 
தற்பொழுது  புலிகள் இந்த நாட்டில் இல்லை. ஆனால்,  புலிகளை உயிர்ப்பித்தவர்கள் தற்பொழுது சர்வதேச நாடுகளிலும் உள்நாட்டிலும் உள்ளார்கள். வெளிநாட்டில் உள்ள புலம்பெயர்ந்தவர்கள்  புலிகள் செய்த கொடூரங்களை மறைத்து இலங்கைக்கும், இராணுவத்திற்கும் எதிராக ஆதாரங்கள் சேகரித்து ஜெனீவாவில் மனித உரிமை அமைப்பின் ஊடாக தண்டனை பெற்றுக் கொடுக்க முயற்சிக்கின்றார்கள். அதற்காக உள்ளூரிலும் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடாக சில அமைப்புகளுக்கு நிதி வழங்குகின்றார்கள். அரசாங்கம் இவர்களது ஒவ்வொரு நகர்வையும் கண்காணித்தே வருகின்றது.
 
தற்பொழுது மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமை மீறல்கள் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக யுத்த மீறல்கள் என்ற போர்வையில் அறிக்கையிடுவதற்கும், அதனூடாக விசாரணை செய்வதற்குமே இவர்கள் முயற்சிக்கின்றனர். இந்த யுத்தத்தில் இராணுவம் செய்த யுத்த மீறல்கள் என்ன எனக் கேட்க விரும்புகின்றேன் ? விடுதலைப் புலிகள் கடந்த 30 வருட காலத்தில் இந்த நாட்டின் பொதுமக்கள், தமிழ், முஸ்லிம், சிங்கள அரசியல்வாதிகளை கொலை செய்தனர்.
 
வடக்கு மக்களை முடக்கி வைத்திருந்தனர். அது பற்றி அறிக்கை அல்லது ஆதாயம் தேடவில்லை. உலகின் சரித்திரத்தில் பயங்கரவாதிகாளான புலிகளை இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசு வெற்றி பெற்று விட்டது என்ற கவலையே இந்த மேலைத்தேய நாடுகளின் தலைவர்களது நிகழ்ச்சி நிரலாக உள்ளது. இதற்குப் பின்னால் சர்வதேச நாடுகளில் வாழ்ந்து வரும் புலம்பெயர் தமிழர்கள் உள்ளனர்.
 

No comments:

Post a Comment