Thursday, January 16, 2014

சென்னை துறைமுகம் மேம்பாட்டிற்கு ரூ.75 கோடி ஒதுக்கீடு!

Thursday, January 16, 2014  
சென்னை::புதிய படகு துறை, வலை பழது பார்க்கும் கூடங்கள் உள்ளிட்ட சென்னை துறைமுகம் மேம்பாட்டிற்கு ரூ.75 கோடி செலவில் மேம்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதன் மூலம் 12 ஆயிரம்மீனவர்கள் நேரடியாகவும், 15 ஆயிரம் மீனவர்கள் மறைமுகமாகவும் பயன் பெறுவார்கள். 
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:_   
வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதிலும், புரதச்சத்துள்ள உணவை பெருக்குவதிலும், கணிசமான அந்நியச் செலாவணியை ஈட்டுவதிலும் மீன்பீடித் தொழில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்றாலும் இந்தத் தொழிலை மேற்கொண்டு வரும் மீனவர்கள் பல இன்னல்களை எதிர்கொள்ள வேண்டி உள்ளது.  
மீன்பிடி தடை காலங்களில் வழங்கப்பட்டு வரும் தொகையை இரட்டிப்பாக்கியது,  மீன்பிடிப்பு குறைந்த காலங்களில் சிறப்பு நிவாரண உதவித் தொகையாக 4,000 ரூபாய் வழங்கும் முன்னோடித் திட்டம், மானிய விலையில் டீசல் வழங்கும் திட்டம், விற்பனை வரி விலக்கு அளிக்கப்பட்ட மண்ணெண்ணெய் வழங்கும் திட்டம், தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாத்தல், ஆழ்கடல் மீன்பிடிப்பினை ஊக்குவித்தல், 
மீன்பிடி துறைமுகங்கள், மீன் இறங்குதளங்கள் மற்றும் மீன் விற்பனைக்கான உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல், கடலோர மாவட்டங்களில் மீன் பதனிடும் பூங்காக்களை அமைத்தல், செயற்கை மீன் உறைவிடங்கள்  நிறுவுதல், கடல் மீனவர்களுக்கு தடையற்ற  தகவல்  தொடர்பு சாதனங்கள் வழங்குதல் போன்ற எண்ணற்ற திட்டங்களை மீனவர்களின் நலனுக்காவும், மீன் உற்பத்தியை அதிகரிப்பதற்காகவும்   முதலமைச்சர்   ஜெயலலிதா தலைமையிலான அரசு  முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.
மீன்பிடிப் படகுகளை பாதுகாப்பான முறையில் நிறுத்திடவும் மற்றும் மீன்பிடி உபகரணங்களை நல்ல முறையில் பராமரிக்கவும் போதிய இடவசதியின்மையின் காரணமாக மீனவர்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, முதல்வர் ஜெயலலிதாதலைமையிலான அரசு மீன்பிடித் துறைமுகங்கள் மற்றும் மீன்பிடித் தளங்களை மீனவர்களின் நலனுக்காக தமிழக கடற்பகுதிகளில் அமைத்து வருகிறது.
காசிமேடு மீன்பிடித் துறைமுகம் என்றும் ராயபுரம் மீன்பிடித் துறைமுகம் என்றும் அழைக்கப் பெறும் சென்னை மீன்பிடித் துறைமுகம் 1984 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.  இத்துறைமுகத்தில் 575 மீன்பிடி படகுகள் வரை நிறுத்துவதற்கு வசதி உள்ளது.  
தற்பொழுது இந்த மீன்பிடி துறைமுகத்தில் வருகைத் தரும் மீன்பிடி படகுகளின் எண்ணிக்கை 1,395 ஆக உயர்ந்துள்ளது மட்டுமன்றி கையாளப்படும் மீன்களின் அளவும் அதிகரித்துள்ளது. எனவே அதிக எண்ணிக்கையுள்ள மீன்பிடி படகுகள் மற்றும் அதிப்படியான மீன்வரத்தினை கையாளுவதற்கு ஏதுவாக, இந்தத் துறைமுகத்தினை  75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்த நிர்வாக ஒப்புதல் வழங்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இத்திட்டத்தின்படி, வடக்கு  அலை தடுப்பு சுவரில் 300 மீட்டர் நீளத்தில் புதிய படகு அணையும் துறை, கண்ணாடி நாரிழை படகுகள் நிறுத்துவதற்கு ஏற்ற வகையில் 200 மீட்டர் நீளத்திற்கு புதிய படகுத்துறை, தற்பொழுதுள்ள  படகுத்துறையின் வடக்கு முனையில்  140 மீட்டர் நீளத்திற்கு நீட்டிப்பு செய்தல், 150 மீட்டர் நீளத்திற்கு இரண்டு புதிய துணை படகு துறைகள், 200 மீட்டர் நீளத்திற்கு இரண்டு புதிய துணை படகு துறைகள்,  இரண்டு புதிய வலை பழுது பார்க்கும் கூடங்கள் ஏற்படுத்துதல், சுகாதார வளாகம், மின்வசதி, சாலை வசதிகள் ஏற்படுத்துதல் மற்றும் துறைமுகத்தினை ஆழப்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். இதன் மூலம்  12,000 மீனவர்கள் நேரடியாகவும், 15,000  மீனவர்கள் மற்றும் தொழிலாளர்கள் மறைமுகமாகவும் பயன் பெறுவர்.
இவ்வாறு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுளளது.

No comments:

Post a Comment