Wednesday, January 01, 2014
இலங்கை::வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இம்மாதம் 28ஆம் திகதியளவில் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்தியா செல்லவுள்ளார். இரண்டு நாடுகளுக்கு இடையில் மீனவர் விவகாரம் சூடு பிடித்துள்ள நிலையிலும் எதிர்வரும் மார்ச் மாதம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் 25 ஆவது கூட்டத் தொடர் நடைபெறவுள்ள நிலையிலுமே வெளிவிவகார அமைச்சரின் இந்திய விஜயம் அமைந்துள்ளது.
இந்திய விஜயத்தின்போது வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் இந்திய பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் மற்றும் ஆளும் கூட்டணியின் முக்கியஸ்தர்கள் எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாக் கட்சியின் முக்கிய தலைவர்கள் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இந்த சந்திப்புக்களின்போது இலங்கை இந்திய மீனவர் விவகாரம் மற்றும் இலங்கையின் அரசியல் தீர்வு விடயம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்படவுள்ளது. குறிப்பாக யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுவரும் வேலைத்திட்டங்கள் குறித்து இந்திய தரப்புக்கு விளக்கமளிக்கப்படவுள்ளது.
இந்திய மீனவர்கள் கைது விவகாரம் தொடர்பில் தமிழகத்தினால் இந்திய மத்திய அரசாங்கத்துக்கு பிரயோகிக்கப்படும் அழுத்தங்கள் பின்னணியிலேயே பேராசிரியர் பீரிஸின் இந்திய விஜயம் அமைந்துள்ளதாக அறிய முடிகின்றது.
இதேவேளை ஜனவரி மாதத்தில் இந்திய இலங்கை மீனவர்கள் சந்தித்துப் பேச்சு நடத்துவதற்கும் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் வெளிவிவகார அமைச்சரின் இந்திய விஜயத்தின்போது இரண்டு நாடுகளுக்கு இடையிலான மீனவர் விவகாரம் முக்கிய இடத்தைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை எதிர்வரும் மார்ச் மாதம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் 25 ஆவது கூட்டத் தொடர் நடைபெறவுள்ள நிலையில் அந்தக் கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் பிரேரணை கொண்டு வரப்பட்டால் இந்தியா எவ்வாறான முடிவை எடுக்கும் என்பது குறித்தும் கலந்துரையாடல்கள் ஆரம்பித்துள்ளன.
அந்தவகையில் மார்ச் மாதம் ஜெனிவாவில் இலங்கை தொடர்பில் பிரேரணை கொண்டுவரப்படின் இந்தியா எவ்வாறான முடிவை எடுக்கும் என்பது தொடர்பிலும் வெளிவிவகார அமைச்சரின் இந்திய விஜயத்தின்போது பேசப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த 2012 மற்றும் 2013 ஆண்டுகளில் ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்பட்ட பிரேரணைகளுக்கு இந்தியா ஆதரவாக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment