Tuesday, December 31, 2013

காங்கிரஸ் எம்.பி. அழகிரி தலைமையில் தமிழக மீனவ பிரதிநிதிகள் பிரதமருடன் சந்திப்பு!

Tuesday, December 31, 2013
புதுடெல்லி::தமிழக மீனவர் சங்க பிரநிதிகள் ஏற்கனவே தி.மு.க. பாராளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் பிரதமரை சந்தித்து இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இந்த நிகழ்ச்சி நடந்த 2 நாட்களில் தமிழகத்தின் ராமேசுவரம், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் புதுவையை சேர்ந்த மீனவர்கள் காங்கிரஸ் எம்.பி. கே.எஸ்.அழகிரி தலைமையில் நேற்று டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தனர்.

இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை விடுவிக்கவும், இலங்கை அரசால் கைப்பற்றப்பட்ட அவர்களுடைய படகுகளை மீட்கவும், இரு நாட்டு மீனவ பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்து இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண ஏற்பாடு செய்யவும் கோரி மனு ஒன்றையும் பிரதமரிடம் அளித்தனர்.

கே.எஸ்.அழகிரி எம்.பி.யுடன் மீனவர் பிரதிநிதிகள் ஆம்ஸ்ட்ராங், குணசேகரன், சங்கர் மற்றும் சிப்பிரியன் ஆகியோரும் உடனிருந்தனர்.

பிரதமரின் சந்திப்புக்கு பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த கே.எஸ்.அழகிரி கூறியதாவது:-

சுமார் 285 மீனவர்கள் இன்றும் இலங்கை சிறையில் இருக்கிறார்கள் என்பதையும், ஏராளமான படகுகள் அவர்களுடைய கட்டுப்பாட்டில் இருப்பதையும், மீனவர்களையும், படகுகளையும் விரைவில் மீட்டுத்தர வேண்டும் என்றும் பிரதமரிடம் விளக்கியுள்ளோம்.

இந்த பிரச்சினையை தான் நன்கு அறிந்திருப்பதுடன், வெளியுறவுத்துறை மந்திரி மூலமாக இலங்கை அரசுடன் பேசி வருகிறோம். தமிழக மீனவர்களும், யாழ்ப்பாண மீனவர்களும் கலந்து பேசி ஒரு முடிவினை காண்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். தமிழக அரசுக்கு இதுபற்றிய தகவலை அனுப்பியிருக்கிறோம். அவர்களின் ஒப்புதல் கிடைத்த பிறகு இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று பிரதமர் கூறினார்.

பிரதமரை சந்திக்கும் முன் மீனவ பிரதிநிதிகள் நிதி மந்திரியையும் சந்தித்து தங்கள் பிரச்சினையை கூறியுள்ளனர். அவர் உடனடியாக பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்தார். இந்த பிரச்சினையில் பிரதமர் தலையிட்டுள்ளதால் பெரிய மாற்றம் ஏற்படும் என்று கருதுகிறோம்.

இவ்வாறு கே.எஸ்.அழகிரி கூறினார்.

No comments:

Post a Comment