Tuesday, December 31, 2013

கல்முனை மாநகர சபை பட்ஜெட் சர்ச்சை; மு.கா. உறுப்பினர்களுடன் சுமூக தீர்வு!!

Tuesday, December 31, 2013
இலங்கை::நாளை சமர்ப்பிக்கப்படவுள்ள கல்முனை மாநகர சபையின் வரவு செலவு திட்டத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் ஆதரித்து வாக்களிப்பது என ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கல்முனை மாநகர சபையின் வரவு செலவு திட்டம் தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஒன்று, நேற்று மாலை நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் மு.கா.செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஹசன் அலியின் நிந்தவூர் இல்லத்தில் இடம்பெற்றது.

இதன்போதே கல்முனை மாநகர சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் மேற்படி தீர்மானத்தை ஏகமனதாக மேற்கொண்டதாக மு.கா.செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஹசன் அலி மெட்ரோ மிரர் செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.

கடந்த 2013-12-23ம் திகதி சமர்ப்பிக்கப்பட இருந்த கல்முனை மாநகர சபையின் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் நாளை 31 ஆம் திகதிக்கு முதல்வரினால் ஒத்தி வைக்கப்பட்டமை தெரிந்ததே.

இந்நிலையில் முஸ்லீம் காங்கிரசின் கல்முனை மாநகர உறுப்பினர்களிடையே ஏற்பட்டிருந்த கருத்து முரண்பாடுகளை நிவர்த்திக்கும் நோக்கில் இவ்விசேட கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக தெரிவித்த ஹசன் அலி எம்.பி.;குறித்த உறுப்பினர்களின் குறை, நிறைகள் யாவும் தலைவரினால் கேட்டறியப்பட்டு- அவற்றுக்கு சுமூகமான தீர்வு காணப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

எல்லோரது பிரச்சனைகளையும் தான் உள்வாங்கியுள்ளதகவும் இப்போதைய சூழலில் எல்லோரும் ஒன்றிணைந்து கல்முனை மாநகர சபையின் வரவு செலவு திட்டத்தை வெற்றியடைய செய்ய பாடுபட வேண்டும் எனவும் இதன்போது தலைவர் கேட்டுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து அனைத்து உறுப்பினர்களும் ஒன்றிணைந்து கல்முனை மாநகர சபையின் வரவு செலவு திட்டத்தை ஆதரித்து வாக்களிப்பது என கூட்டாக உறுதியளித்தனர் என்று ஹசன் அலி எம்.பி. மேலும் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் தலைவர், செயலாளர் ஆகியோருடன் கல்முனை அபிவிருத்தி குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம்.ஹரீஸ், கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் மாகாண சபையின் முஸ்லீம் காங்கிரஸ் குழுத் தலைவருமான ஏ.எம்.ஜெமீல், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மூத்த துணைத் தலைவர் முழக்கம் அப்துல் மஜீத், கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர், முன்னாள் முதல்வர் சிராஸ் உள்ளிட்ட உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment