Tuesday, December 10, 2013

சூரிய எல்லைக்குள் நுழைந்ததால் ஐசான் வால் நட்சத்திரம் எரிந்தது!!

Tuesday,10,December,2013
நாசா::இந்த நூற்றாண்டின் சிறந்த வால்நட்சத்திரமாக வானில் தெரியும் என எதிர்பார்க்கப்பட்ட 'ஐசான்' வால்நட்சத்திரம் சூரிய எல்லைக்குள் நுழைந்ததால் அதன் ஈர்ப்புவிசை தாங்காமல் சிதைந்து விட்டதாக விஞ்ஞானிகள் அதிகார பூர்வமாக அறிவித்துவிட்டனர். இருந்தாலும் 'நாசா' தொடர்ந்து இதன் மூலம் வானில் ஏதாவது மாற்றங்கள் நிகழ்கிறதா என்பதை தீவிரமாக கண்காணித்து வருகிறது. வால்நட்சத்திரம் சிதைந்ததால் வானில் அதிசயத்தை காண காத்திருந்த அறிவியலாளர்கள் உட்பட அனைவரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
 
இன்டர்நேஷனல் சயின்டிபிக் ஆப்டிக்கல் நெட்வொர்க் (ஐசான்) எனப்ப டும் சர்வதேச அறிவியல் ஒளிஊடக கூட்டமைப்பில் ரஷ்யா, தஜிகிஸ்தான், உக்ரேன், பெலாரஸ், பொலிவியா, ஜார்ஜியா, மால்டோவா, உஸ்பெகிஸ்தான், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, இத்தாலி ஆகிய 11 நாடுகள் உள்ளன. இந்த நாடுகள் 20 இடங்களில் வான்நோக்கி கூடங்களை அமைத்து 30க்கும் மேற்பட்ட தொலைநோக்கிகள் மூலம் வான்வெளியில் புதிதாக நிகழும் மாற்றங்களை கண்காணித்து வருகின்றன.
 
இதில் ரஷ்யாவைச் சேர்ந்த ஆர்த்யோம் நொவிசொனோக், பெலாரஸை சேர்ந்த விட்டலி நெவ்ஸ்கி ஆகிய இரு விஞ்ஞானிகளும் கடந்த செப்டம்பர் மாதம் 12ம் தேதி வானில் ஒரு வால்நட்சத்திரம் நகர்ந்து வருவதை கண்டுபிடித்தனர். இந்த வால்நட்சத்திரத்திற்கு தங்கள் அமைப்பான ள்ஐசான்ளி பெயரையே சூட்டினர். இருந்தாலும் பிரான்ஸ் நாட்டில் உள்ள ஐஏயு எனப்படும் சர்வதேச வானவியல் கழகம் இதற்கு சி/2012 எஸ்1 என்று பெயரிட்டது.
 
சூரியனை நோக்கி நெருங்கி வரும் இந்த வால்நட்சத்திரம், சூரியனுக்கு வெகு அருகில் சென்ற பின் நவம்பர் மாத கடைசி அல்லது டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் வானத்தில் தெரியும் என விஞ்ஞானிகள் கூறினர். மேலும் சூரியனை உரசிச் செல்வதால் இந்த நூற்றாண்டின் மிக பிரகாசமான வால்நட்சத்திரமாக இது இருக்கும் என்றும் கூறினர்.
 
இந்த அரிய நிகழ்ச்சியால் வானில் ஏற்படும் மாற்றங்களை ஆராய்வதற்கு விஞ்ஞானிகளும், இதை கண்ணால் பார்ப்பதற்கு குழந்தைகள் முதல் அனைவரும் ஆவலாய் இருந்தனர். ஆனால் சூரியனுக்கு மிக அருகில் வந்த இந்த வால்நட்சத்திரம் அதன் எல்லைக்குள் சென்றதால் முற்றிலும் சிதைந்து விட்டதாக தற்போது விஞ்ஞானிகள் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில வானவியல் கருத்தாளர் ஜெயமுருகன் கூறியதாவது: சூரிய குடும்பத்தின் எல்லை என்று சொல்லப்படும் ஊர்த் மேக கூட்டத்தில் இருந்து கிட்டத்தட்ட 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த வால்நட்சத்திரம் கிளம்பியதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். சூரியனை நோக்கி ஒரு லட்சம் கி.மீ., வேகத்தில் இது வந்து கொண்டிருந்தது.
 
இந்த வால்நட்சத்திரம் பெரியதாக இருப்பதால் சூரியனில் ஈர்ப்பு விசையால் சிதறடிக்கப்படும் வாய்ப்பு குறைவு என்று விஞ்ஞானிகள் கருதினர். ஆனால் நவம்பர் 29ம் தேதி நள்ளிரவில் சூரியனை நெருங்கும் போது அதன் ஈர்ப்பு விசையால் கவரப்பட்டு 2 கி.மீ., நீளமாக இருந்த இந்த வால்நட்சத்திரம் முழுவதும் சிதையுண்டு ஆவியாகி விட்டது என, சூரியனின் மேற்பரப்பை ஆராய்கின்ற செயற்கை கோள் அனுப்பிய புகைப்படத்தின் அடிப்படையில் 'ஐசான் வால்நட்சத்திரம் கண்காணிப்பு அமைப்பான' சிஐஓசி டிசம்பர் 2ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது. 
 
சூரியனில் மேற்பரப்பில் இருந்து 11.8 லட்சம் கி.மீ., தொலைவுக்கு அப்பால் இருக்கும் போது இது நிகழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இருந்தாலும் வால்நட்சத்திரத்தின் பகுதியில் இருந்து தப்பித்த ஏதேனும் சிறு பகுதி உள்ளதா என்பதை 'நாசா' தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. இது வெற்றிகரமாக சூரியனை சுற்றி கடந்திருந்தால் இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த வால்நட்சத்திரமாக அமைந்திருக்கும். தொடர்ந்து வானில் ஏற்படும் மாற்றங்களை விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர். இவ்வாறு ஜெயமுருகன் கூறினார்.
 
5 ஆயிரம் வால்நட்சத்திரங்கள்
 
கடந்த 400 ஆண்டுகளில் ஏறத்தாழ 5 ஆயிரம் வால்நட்சத்திரங்களை மனிதர்கள் கண்டுள்ளனர். இப்போது வந்த ஐசான் வால்நட்சத்திரத்தின் சுற்றுப்பாதையை ஒட்டி கடந்த 1680ம் ஆண்டில் மிகப்பெரிய வால்நட்சத்திரம் வந்து சென்றுள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதற்கு மகா வால்நட்சத்திரம் என்று பெயர் வைத்துள்ளனர். சூரியனிலிருந்து 75 கோடி கி.மீ., அடுத்துள்ள வியாழன் கோளுக்கு அருகில் வரும் வரை அதற்கு வால் முளைப்பதில்லை. இந்த பகுதியை கடந்த பிறகு சூரிய வெப்பத்தின் தாக்கத்தால் வால்நட்சத்திரத்தின் மேற்பரப்பில் உறைநிலையில் உள்ள வாயுக்கள் ஆவியாகி நீண்ட வாலாக உருவெடுக்கின்றன. இதுதான் சூரிய ஒளியை பிரதிபலித்து வாலாக நமக்கு காட்சி தருகிறது. வால்நட்சத்திரம் குறித்து கடந்த 1910ம் ஆண்டில் பாரதியார், 'தூமகேது' என்ற தலைப்பில் பாடல் எழுதியுள்ளார். அதில், 'தினையின் மீது பனைநின்றாங்கு மணிச்சிறு மீன்மிசை வளர்வாள் ஒளிதர' என்று பாடியுள்ளார்.

No comments:

Post a Comment