Wednesday, December 18, 2013

அதிமுக பொதுக்குழு நாளை கூடுகிறது : தனித்து போட்டி குறித்து ஜெயலலிதா அறிவிப்பு?!

Wednesday, December 18, 2013
சென்னை::அதிமுக பொதுக்குழு கூட்டம் நாளை மாலை நடக்கிறது. இதில் நாடாளுமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது குறித்த அறிவிப்பை, அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக நடந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பாஜ ஆட்சியைப் பிடித்தது. மிசோரமில் காங்கிரசும், டெல்லியில் இழுபறியும் நீடிக்கிறது. இந்த தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது முதல், நாடாளுமன்ற தேர்தலுக்கான பரபரப்பு, அரசியல் கட்சிகளிடம் தொற்றியுள்ளது.
 
திமுக பொதுக்குழு கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் தலைவர் கருணாநிதி, காங்கிரசுடன் இனி கூட்டணி இல்லைஎன்று அறிவித்தார். பின் நேற்று அளித்த பேட்டியில் தனித்துப் போட்டியிடப் போவதாகவும் அறிவித்தார். அதேசமயம், காங்கிரசும் தனித்துப் போட்டியிட தயாராக உள்ளது என்று அதன் மாநில தலைவர் ஞானதேசிகன் அறிவித்தார். தேமுதிக செயற்குழு கூட்டத்தில், கூட்டணி குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. எனினும், அக்கூட்டத்தில் திமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்றும் சிலரும், பாஜவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்றும் சிலரும் பேசியதாக தெரிகிறது. இறுதியில் கூட்டணி குறித்து முடிவு செய்யும் அதிகாரம், கட்சியின் தலைவர் விஜயகாந்துக்கு அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
தமிழகத்தில் பெரும்பாலான கட்சிகள் கூட்டணி குறித்து முடிவு செய்துவிட்ட நிலையில், ஆளுங்கட்சியான அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நாளை மாலை சென்னை அடுத்த வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடக்கிறது. இந்தக் கூட்டத்திற்காக மாநிலம் முழுவதிலும் இருந்து ஏராளமான பொதுக்குழு உறுப்பினர்கள் சென்னையில் குவிந்துள்ளனர். அதிமுக, ஏற்கனவே 3வது அணி அமைக்கப் போவதாக அறிவித்தது. மேலும், ஜெயலலிதாதான் அடுத்த பிரதமர் என்று அதிமுகவினர் பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். 40 தொகுதியிலும் அதிமுக போட்டியிடும் என்றும் அதிமுகவினர் ஒவ்வொரு பொது கூட்டத்திலும் பிரசாரம் செய்து வருகின்றனர்.
 
அதேநேரத்தில் ஏற்காடு இடைத்தேர்தல் பிரசாரத்துக்கு வரும்படி அதிமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. இதனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மட்டும் ஒரு சில இடங்களில் பிரசாரம் செய்துவிட்டு திரும்பி விட்டனர். இதனால், அதிமுக பாராளுமன்றத் தேர்தலில் தனித்து 40 தொகுதிகளில் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை முதல்வர் ஜெயலலிதா, பொதுக்குழு கூட்டத்தின்போது அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு அதிமுக தனித்துப் போட்டியிடும் என்று அறிவித்தால், தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் நான்கு முனை போட்டி ஏற்படும். மீதம் உள்ள ஒரு சில கட்சிகள் 4 அணிகளில் உள்ள ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டணி அமைத்து ஒரு சில தொகுதிகளில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment