Thursday, December 12, 2013
புதுடெல்லி::டெல்லி விமான நிலையத்தில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி பயணித்த விமானம் விபத்துக்குள்ளாவது தவிர்க்கப்பட்டு அவர் உயிர் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சோனியா காந்தியின் தொகுதியான ரேபரேலிக்கு சென்றுவிட்டு செசன்னா வகை சொகுசு தனி விமானத்தில் டெல்லிக்கு திரும்பினார்.
ராகுல் காந்தியின் தனி விமானம் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை நெருங்கியதும், அந்த விமானம் தரை இறங்க விமான கட்டுப்பாட்டு அறையில் இருந்து அனுமதி கொடுக்கப்பட்டது. இதையடுத்து ராகுல் காந்தியின் விமானி, அந்த விமானத்தை தரை இறக்க முயன்றார்.
அந்த சமயத்தில் அதே ஓடுத்தளத்தில் ஏற்கனவே ஒரு விமானம் நகர்ந்து கொண்டிருந்தது.
விரைவாக செயல்படக்கூடிய செசன்னா வகை விமானத்தை மிக மெதுவாக நகரக்கூடிய ரஷிய விமானம் ஓடுத்தளத்தில் இருக்கும்போதே தரையிறங்க அனுமதி அளித்தது ஒரு பயங்கர விபத்திற்கு வழிவகுத்திருக்கும் நிலை இருந்தது.
ராகுல் விமானம் தரை இறங்க நெருங்கி விட்டநிலையில், ஓடுத்தளத்தில் ராகுல் விமானமும், மற்றொரு விமானமும் இருப்பதை கண்டதும், விமான கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து, ராகுல் விமானத்தின் விமானியை தொடர்பு கொண்டு, விமானத்தை தரை இறக்க வேண்டாம் எனக் கூறியுள்ளனர்.
உடனடியாக செயல்பட்ட ராகுல் காந்தியின் விமானத்தை செலுத்திய விமானி அதனை உடனடியாக மேலே கிளப்பினார். இதனால் விமானங்கள் மோதி மிகப் பெரிய விபத்து ஏற்படுவது கடைசி நிமிடத்தில் தவிர்க்கப்பட்டது.
ராகுல் காந்தி மிகவும் ஆபத்தான் நிலையிலிருந்து உயிர் தப்பியது குறித்து அறிந்த விமான நிலைய அதிகாரிகள், இத்தகைய விபத்துகள் குறித்து முழு விசாரணை நடத்த விமான போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தனர்.

No comments:
Post a Comment