Thursday, December 12, 2013

புதுகை மீனவர்கள் 30 பேர் 8 படகுகளுடன் கைது!:-இலங்கை கடற்படையால் சிறை பிடிப்பு: நாகை மீனவர்கள் வேலை நிறுத்தம்!

Thursday, December 12, 2013
புதுக்கோட்டை::புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம், கோட்டை பட்டினம் ஆகிய கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் 30 பேர் நேற்று 8 விசை படகுகளில் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.

அவர்கள் ஆழ் கடல் பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு திடீரென வந்த இலங்கை கடற்படையினர் புதுகை மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்தனர். படகுகளில் இருந்த   மீனவர்கள் அனைவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் 30 பேரையும் இலங்கை நெடுந்துறை முகாமுக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இது போன்று கடந்த 20–ந் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்ற ஜெகதாபட்டினம், கோட்டை பட்டினம் மீனவர்கள் குமரேசன், ஆனந்த், முத்தையா, குறழரசன் உட்பட 20 பேரை கோடியக்கரைக்கு தென்கிழக்கே இலங்கை கடற்படை பிடித்து சென்றது. அவர்களின் 5 படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.

தற்போது அவர்கள் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்றும் 30 மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்ட சம்பவம் மீனவர்கள் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபகாலமாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்து செல்லும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது.

இதில் ஜெகதாபட்டினம், கோட்டைபட்டினம் கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் சுமார் 100 பேர் இதுவரை இலங்கை கடற்படையால் பிடித்து செல்லப்பட்டுள்ளனர்.

இது போன்று தொடர்ந்து இலங்கை கடற்படையினர் நடத்தும் அட்டூழியத்தை தடுத்து நிறுத்தும் படி மீனவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

தற்போது மீண்டும் இன்று 30 மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்து சென்ற சம்பவம் மீனவ கிராமங்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்று காலையில் இருந்தே ஜெகதாபட்டினம், கோட்டைபட்டினம் கிராமங்களில் கடும் பதட்டம் நிலவி வருகிறது. மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை கவரும் வகையில் பெரிய போராட்டத்தை நடத்துவது குறித்தும் மீனவர் சங்கத்தினர் ஆலோசித்து வருகின்றனர்.

இலங்கை கடற்படையால் சிறை பிடிப்பு: நாகை மீனவர்கள் வேலை நிறுத்தம்!

நாகப்பட்டினம்::நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியார் நகர், கல்லார், சாமந்தான் பேட்டை, நாகூர் பட்டினச்சேரி, வேளாங்கண்ணி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 215 மீனவர்கள் 32 விசைப்படகுகளில் கடலில் மீன் பிடிக்க சென்றனர்.

அப்போது சிறிய கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் நாகை மீனவர்கள் 215 பேரையும், அவர்களது விசைப்படகுகளையும் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

பின்னர் அவர்களை இலங்கைக்கு அழைத்து சென்றனர். அவர்களில் 109 மீனவர்கள் மற்றும் 15 படகுகளை தங்கள் வசம் வைத்து கொண்டு மீதி உள்ள மீனவர்களையும் படகுகளையும் விடுவிப்பதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் திரிகோணமலை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையால் விடுவிக்கப்பட்ட மற்ற மீனவர்கள் இன்று நாகை வந்து சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் நாகை அக்கரைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் ஆவார்கள். அவர்களை விடுதலை செய்யக்கோரி அக்கரைப்பேட்டை மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர்.

அதன் படி இன்று வேலை நிறுத்தம் தொடங்கியது. அக்கரைப்பேட்டையை சேர்ந்த 109 மீனவர்கள், 15 படகுகளை விடுவிக்க கோரி இன்று வேலை நிறுத்தம் நடைபெற்றது.

இதனால் 500 விசைப்படகுகள், 500 பைபர் படகுகள் கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சுமார் 6,500 மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
நாகை அக்கரைப்பேட்டை மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மீனவ கிராமங்களில் பதட்டத்தை உருவாக்கி உள்ளது.
tamil matrimony_INNER_468x60.gif

No comments:

Post a Comment