Sunday, November 17, 2013
இலங்கை::இன்னமும் தமது குடியேற்ற நாடு போன்று இலங்கையை நடத்த முனைவதாக பிரித்தானியா மீது பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹகியூ மற்றும் வெளிவிவகார இணையமைச்சர் ஹியூகோ சுவையர் ஆகியோர் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பாக வெளியிட்டுள்ள கருத்துகள் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையிலே பாதுகாப்புச் செயலர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள சில பிரித்தானியப் பிரதிநிதிகள் வெளியிட்டுள்ள கருத்துகள் இருதரப்பு உறவுகளைக் குழிபறிக்கும் வகையில் அமைந்துள்ளன. அவர்கள் வேறெந்த நாட்டிலும் இதுபோன்று நடந்து கொண்டிருக்க முடியாது போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற பிரித்தானியாவின் அணுகுமுறை பொருத்தமற்றது. அனைத்துலக சமூகத்தின் ஒரு பகுதி நம்பகமான உள்நாட்டு விசாரணையையே கோருகிறது. ஆனால் ஐ.நா நிபுணர் குழு மற்றும் பிரித்தானியாவின் சனல் 4 போன்ற ஊடகங்கள் எம் மீது சுமத்தும் குற்றச்சாட்டுகள் பெயர் தெரியாதவர்கள் அளித்த சாட்சிகளின் அடிப்படையிலேயே அமைந்தவை. மேலதிகமான விசாரணைகளை நடத்துவதற்கு நம்பகமான தகவல்கள் வெளிப்படுத்தப்பட வேண்டும்.
நம்பகமான விசாரணைகளை நடத்துவதில் பிரித்தானியா அக்கறை காட்டினால் ஆதாரங்களை அனைத்துலக நீதியாளர்களிடம் தாமதமின்றி சமர்ப்பித்து அழுத்தம் கொடுக்க வேண்டும். நம்பகமற்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இலங்கை மீது அனைத்துலக விசாரணைகளை மேற்கொள்ள முடியாது” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment