Thursday, November 14, 2013

வட மாகாண ஆளுனரின் உரை ஆழமான உள்ளடக்கங்களைக் கொண்டதாகும் அரசியல் நாகரீகம் தெரியாதவர்களே அதை எதிர்த்தார்கள்: கந்தசாமி கமலேந்திரன்!

Thursday, November 14, 2013
இலங்கை::வடக்கு மாகாண சபையின் சுபீட்சமான எதிர்காலத்துக்கு ஆக்கபூர்வமான ஆலோசனைகளை உள்ளடக்கியதாக ஆளுனரின் கொள்கை விளக்க உரை அமைந்திருந்தது. வடக்கு மக்களின் விவசாயம், கடற்றொழில்,வடக்கின் அபிவிருத்தி மற்றும் சமூக ஒருமைப்பாடு என்பவற்றின் மேம்பாட்டுக்காக மத்திய அரசுடனும் இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை தெளிவாக சுட்டிக்காட்டிய ஆளுனரின் உரை வரவேற்புக்குரியதாகும்.

இவ்வாறு வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன் தெரிவித்துள்ளார்.

யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த போதும், அதற்குப் பின்னர் வடக்கு மாகாண சபைக்கு மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படும் வரையும் பல்வேறு தேவைகளுக்கு வடக்கு மக்கள் முகம் கொடுத்து நின்றபோது ஆளுனர் என்றவகையில் பல சவால்களுக்கு முகம் கொடுத்து அவர் வட மாகாணத்துக்காக ஆற்றிய சேவைகளை பாராட்டாமல் இருக்கமுடியாது.

எமது ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடனும், அதிகாரிகளுடனும் இணைந்து ஆளுனர் அவர்கள் வடக்கின் அபிவிருத்திக்காக பல துணிச்சலான தீர்மானங்களை எடுத்துச் செயலாற்றியதையும் மறந்துவிட முடியாது.

கடந்த பதினோராம் திகதி வடக்கு மாகாண சபையில் கொள்கை விளக்க உரையாற்றிய ஆளுனர் அவர்கள் வட மாகாணத்தின், விவசாயம், மீன்பிடி, நீர்ப்பாசனம், கால்நடை, கல்வி, சுகாதாரம், உள்ளுராட்சி, வீதிகள், மற்றும் சுற்றுலாத்துறை என்பவற்றில் இதுவரை அடைந்த முன்னேற்றங்களையும், 2014 ஆண்டுக்கான வேலைத்திட்டத்தில் அடைய வேண்டிய இலக்குகளையும் மிகத் தெளிவாக கூறியிருந்தார்.

அறிந்திராத தகவல்களையும், வட மாகாணம் தழுவியதான அறிய வேண்டிய விடயங்களையும் அவரது உரையில் காணமுடிந்தது. அவசியமிக்கதொரு உரையை அவர் ஆற்றிக் கொண்டிருக்கையில் அதை பெரும்பான்மையான உறுப்பினர்கள் அக்கறையோடு கேட்டுக் கொண்டிருந்தனர். ஒரு சிலர் ஆளுனரின் உரையை எதிர்ப்பதாகக் கூறி வெளிநடப்புச் செய்தனர். அச்செயலானது அநாகரீகமானதாகும். ஊடகங்களுக்கு தெரிவித்துவிட்டதற்காக தாம் வெளிநடப்புச் செய்வதாக கூறியது நகைப்பிற்கிடமானதாகும். அவர்களின் அருவறுப்பான அரசியல் நடத்தையையே அது காட்டியது.

எமது நாட்டின் அரசியல் சாசனத்தை ஏற்றுக்கொண்டவர்கள் மாகாணசபை முறைமையில் காலம் தாழ்த்தியாவது நம்பிக்கை கொண்டவர்கள் மக்கள் வழங்கிய ஆணையை ஆக்கபூர்வமான செயல்களுக்கு முன்வைப்பதைவிடுத்து நிகழ்ச்சி நிரலுக்கு அப்பாற்பட்டு நாகரிகமற்றவர்கள் போல் உயரிய சபையில் நடந்து கொண்டது கவலையளிக்கின்றது.

அரசியல் அமைப்பில் நடைமுறையில் உள்ளதை நடைமுறைபடுத்திபோது மௌனமாக இருந்து கொள்கை விளக்க உரையை ஏற்றுகொண்டவர்கள் இறுதியில் நீலிக்கண்ணீர் விட்டது வேடிக்கையானது.

முதலமைச்சர் அவர்கள் ஆளுனருக்கு கொடுக்கவேண்டிய கௌரவத்தைக் கொடுத்துச் செயற்பட்டு வடக்கு மாகாண சபையினதும், தமிழர்களின் பன்பாட்டையும் பாதுகாத்ததை பாராட்ட வேண்டும். முதலமைச்சரின் நற்பெயருக்கும், வட மாகாண மக்களின் கௌரவத்துக்கும் அவமானத்தைத் தேடித்தரும் அநாகரீகமான செயற்பாடுகள் கண்டிக்கப்படவேண்டியதாகும். அது போன்ற இழிவான காரியங்கள் எதிர்காலத்தில் வட மாகாண சபையில் இடம்பெற கௌரவ முதலமைச்சர் இடமளிக்கமாட்டார் என்று நம்புகின்றேன்.

நன்றிமக்கள் சேவையிலுள்ள

கந்தசாமி கமலேந்திரன்
எதிர்க்கட்சித் தலைவர்,
வடக்கு மாகாண சபை
 

No comments:

Post a Comment