Friday, November 1, 2013

தீபாவளி விற்பனை ஜோர் சென்னை பஜார்களில் அலைமோதும் கூட்டம் பஸ், ரயில்களில் இடம் கிடைக்காமல் பயணிகள் பரிதவிப்பு!

Friday, November 01, 2013
சென்னை:தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.
 நாடு முழுவதும் நாளை தீபாவளி உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. சென்னையில் வசிக்கும் வெளிமாவட்ட மக்கள் நேற்று முன்தினம் இரவில் இருந்தே சொந்த ஊருக்கு செல்ல தொடங்கி விட்டனர். தீபாவளியை சொந்த ஊரில் கொண்டாட வேண்டும் என்பதற்காக ஆயிரக்கணக்கானோர் பஸ், ரயில்களில் முன்பதிவு செய்தனர். அவர்கள் பிரச்னை இல்லாமல் ஊர் போய் சேர்ந்து விட்டனர். அதன்பின், சிறப்பு ரயில், அரசு விரைவு பஸ்களிலும் முன்பதிவு முடிந்து விட்டது. டிக்கெட் கிடைக்காதவர்கள் ஏதாவது ஒரு பஸ், ரயிலை பிடித்து ஊருக்கு புறப்பட்டனர்.

 சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்கு வழக்கமாக 400க்கும் அதிகமான விரைவு பஸ்களும், ஆயிரத்துக்கும் அதிகமான புறநகர் பஸ்களும் இயக்கப்படும். தீபாவளியை முன்னிட்டு வழக்கமாக செல்லும் பஸ்களுடன் கடந்த 29ம் தேதி 700 சிறப்பு பஸ்களும், 30ம் தேதி 1000 சிறப்பு பஸ்களும், நேற்று 1200 பஸ்களும் இயக்கப்பட்டன. இதே போல், இன்றும் 1400 பஸ்கள் இயக்கப்படுகின்றன. நேற்றிரவு பஸ்களில் கூட்டம் அலைமோதியது. இதனால், பஸ்சில் இடம் பிடிப்பதில் பலத்த போட்டி ஏற்பட்டு, பயணிகள் பரிதவித்தனர். வழக்கமாக, பகல் நேரங்களில் கோயம்பேடு பஸ்நிலையத்தில் கூட்டம் இருக்காது. ஆனால், நாளை தீபாவளி என்பதால் பகல் பஸ்சில் இடம் கிடைத்தாலே போதும் என்று இன்று காலையிலேயே ஏராளமானோர் திரண்டிருந்தனர். இதைப்போல் ரயில்களிலும் கூட்டம் அலைமோதியது.

சென்னையில் இந்த ஆண்டு தீபாவளி விற்பனை நேற்று வரை மந்தமாகவே காணப்பட்டது. நேற்றுதான் விற்பனை சூடுபிடித்தது. தி.நகர், புரசைவாக்கம், மயிலாப்பூர், பாரிமுனை, வண்ணாரப்பேட்டை ஆகிய இடங்களில் இன்று காலை ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். தீபாவளி விற்பனையை முன்னிட்டு, வழக்கமாக 9 மணிக்கு திறக்கப்படும் கடைகள் காலை 8 மணிக்கே திறக்கப்பட்டன. தி.நகர் ரங்கநாதன் சாலை, உஸ்மான் சாலை, பாண்டிபஜார், புரசைவாக்கம், என்.எஸ்.சி.போஸ் சாலை மற்றும் வண்ணாரப்பேட்டை பஜார்களில் மக்கள் வெள்ளமாக காட்சியளிக்கிறது.

கூட்ட நெரிசலை பயன்படுத்தி கொள்ளையர்கள் கைவரிசை காட்டலாம் என்பதால் பஸ், ரயில்களிலும், பஜார்களிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நகரின் முக்கியமான இடங்களில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தீபாவளிக்கு இனிப்பு, பட்டாசு விற்பனையும் படுஜோராக நடக்கிறது. சென்னை தீவுத்திடல், ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் திறக்கப்பட்டுள்ள பட்டாசு கடைகளில் இன்று காலை முதல் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகின்றன.

தீபாவளியையொட்டி, கோயில்களில் நாளை அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. பள்ளிகளுக்கு இன்றே விடுமுறை விடப்பட்டதால் தீபாவளி கொண்டாட்டம் களை கட்டத் தொடங்கியுள்ளது.
 
tamil matrimony_INNER_468x60.gif

No comments:

Post a Comment