Friday, November 29, 2013

உளவுத்துறை எச்சரிக்கையால் மேட்டூர் அனல்மின் நிலையத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் படை!

Friday, November 29, 2013
மேட்டூர்::உளவுத் துறை எச்சரிக்கையின்படி மேட்டூர் அனல்மின் நிலையத்தில், துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.சேலம் மாவட்டம் மேட்டூர் அனல்மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட 4 யூனிட்கள் மூலம் 840 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகிறது. தற்போது, ரூ.3,500 கோடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய யூனிட்டில் 600 மெகாவாட் மின்சாரம¢ உற்பத்தி செய்யப்படுகிறது.
 
இந்நிலையில், கூடங்குளம் அணுமின் நிலையம் அமைந்துள்ள இடிந்தகரை சுனாமி காலனியில் நாட்டு வெடிகுண்டுகள் வெடித்ததில் வீடு தரைமட்டமாகி 6 பேர் பலியானார்கள். அப்பகுதியில் போலீசார் சோதனையிட்டதில் 7 கிலோ வெடிமருந்தும், 6 நாட்டு வெடிகுண்டுகளும் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து, மின் நிலையங்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்துமாறு உளவுத் துறை எச்சரித்துள்ளது.
 
இதனால், நேற்று முதல் மேட்டூர் அனல்மின் நிலையத்துக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே மேட்டூர் அனல்மின் நிலையத்தில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் உள்ளனர். இவர்களுடன் நேற்று முதல் தமிழ்நாடு சிறப்பு காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒரு இன்ஸ்பெக்டர், நான்கு சப்,இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 65 போலீசார் துப்பாக்கி ஏந்திய நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் கோவையில் இருந்து வரவழைக்கப்பட்ட 20 பெண் காவலர்களும் உள்ளனர். 24 மணி நேரமும் இவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. -

No comments:

Post a Comment