Monday, November 18, 2013

அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அபோர்ட் கொழும்பு துறைமுகத்திற்கு விஜயம்: கடற்பாதுகாப்பு, ஆட்கடத்தல் குறித்து பேச்சுவார்த்தை!

Monday, November 18, 2013
இலங்கை::அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அபோர்ட் இலங்கை கடற்படைக்குச் சொந்தமான ‘சயுர’ என்ற பாரிய கப்பலை நேற்று பார்வையிட்டார்.
 
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜயனாத் கோலம்பகேயின் விஷேட அழைப்பை ஏற்று கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்த அவுஸ்திரேலிய பிரதமருக்கு கடற்படையின் விசேட மரியாதை அணிவகுப்புடன் செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
 
சயுர கப்பலை பார்வையிட கடற் படையின் வாகன அணிவகுப்புடன் கொழும்புத்துறைமுகத்திற்கு வருகைத்தந்த அவுஸ்திரேலிய பிரதமர் டொனி அபோர்டை பாதுகாப்புச் செயலாளர் கோட்டாய ராஜபக்ஷ கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜயனாத் கொலம்பகே ஆகியோர் வரவேற்றனர்.
 
அவுஸ்திரேலியாவின் அரச தலைவர் ஒருவர் கடற்படையின் கப்பலுக்கு வருகை தந்து பார்வையிட்டமை இதுவே முதற்தடவையாகும்.
பொதுநலவாய அரச தலைவர்களின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் பொருட்டு இலங்கை வந்துள்ள அவுஸ்திரேலிய பிரதமர் உச்சி மாநாட்டிற்கு இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதில் ஓர் அங்கமாக சட்ட விரோத கடத்தலை தடுக்க இலங்கை அரசாங்கமும் கட்றபடையினரும் சிறந்த முறையில் முன்னெடுத்துவரும் வேலைத் திட்டங்கள் தொடர்பில் நன்றி தெரிவிக்கும் வகையிலேயே அவுஸ்திரேலிய பிரதமரின் இந்த வருகை இடம்பெற்றிருந்தது.
 
இந்த நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம், சட்ட மா அதிபர் பாலித பெர்னாண்டோ, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக அமுனுகம, முன்னாள் கடற்படைத் தளபதியும் அவுஸ்திரே லியாவுக்கான தூதுவருமான அட்மிரல் திஸர சமரசிங்க, இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா ரத்நாயக்க, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம, பொலிஸ் மா அதிபர் என். கே. இளங்ககோன், கரையோர பாதுகாப்பு படையின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ரவீந்ர விஜேகுணரத்ன ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
கடற்படைக்கச் சொந்தமான பாரிய போர் கப்பலான சயுரவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவுஸ்திரேலிய பிரதமர், கப்பலை முழுமையாக பார்வையிட்டதுடன் அதில் பொருத்தப்பட்ட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் தொடர்பில் கேட்டு அறிந்துக் கொண்டார். அதேநேரம் அந்த கப்பலின் மேல்பகுதியின் ஊடாக வெளியே வந்த அவுஸ்திரேலிய பிரதமர் கப்பலில் இருந்தவாறு கொழும்பு துறைமுகத்தின் தோற்றத்தையும் பார்வையிட்டார்.
 
அதன் பின்னர் அமைச்சர்கள், பாதுகாப்பு செயலாளர் தலைமையிலான உயர் அதிகாரிகளுக்கும் அவுஸ்திரேலிய பிரதமருக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது. அரை மணிநேரம் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலின் போது பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பாக விரிவாக ஆராய்ந்ததுடன் இலங்கை கடற்படைக்கு இரு கப்பல்களை அவுஸ்திரேலியா தருவதற்கு தயாராக உள்ள தகவலையும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment