Sunday, November 03, 2013
சென்னை::காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொண்டால்தான் மத்திய அரசின் கருத்தை தெரிவிக்க முடியும் என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் வெங்கையா நாயுடு கூறினார்.
பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான வெங்கையா நாயுடு எம்.பி., சென்னையில் தியாகராயநகரில் உள்ள கட்சியின் மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்வதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. முதலில், தங்களது கூட்டணி கட்சிகளின் நிலையை காங்கிரஸ் கட்சி அறிந்துகொள்ள வேண்டும். மேலும், தமிழர்களின் உணர்வுகளை கருத்தில் கொள்வதுடன், அண்டை நாட்டுடனான கொள்கைகளையும் மனதில் வைத்து முடிவு எடுக்க வேண்டும்.
இதுபோன்ற மாநாடுகளில் கலந்துகொண்டால்தான் மத்திய அரசின் கருத்தை தெரிவிக்க முடியும். இலங்கையில் 13வது அரசியல் சட்டத் திருத்தத்தையும் நிறைவேற்ற வலியுறுத்த முடியும்.
கச்சத்தீவு பிரச்சனையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க தவறிவிட்டது. பாராளுமன்றத்தில் நாங்கள் எவ்வளவு குரல் கொடுத்தும், மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.
இவ்வாறு வெங்கையா நாயுடு கூறினார்.


No comments:
Post a Comment