Friday, November 15, 2013
சென்னை::இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதற்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று விடுதலை சிறுத்தை அறிவுறுத்தி இருந்தது.
சென்னையில் நடைபெறும் மறியல் போராட்டத்தில் விடுதலை சிறுத்தை தலைவர் திருமாவளவன் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர் எங்கு மறியல் போராட்டத்தில் ஈடுபடுவார் என்று தெரியாமல் இருந்ததால் போலீசார் குழப்பத்தில் இருந்தனர். இருந்தாலும் அனைத்து ரெயில் நிலையங்களிலும் போலீசார் உஷார்படுத்தப் பட்டு இருந்தனர்.
இந்த நிலையில் பேசின் பிரிட்ஜ் ரெயில் நிலையத்தில் திருமாவளவன் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து பேசின் பிரிட்ஜ் ரெயில் நிலையத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். ரெயில் நிலையத்தின் அனைத்து வாசல்களிலும் போலீசார் அரண்போல் நின்றனர்.
காலை 9 மணியளவில் விடுதலை சிறுத்தையினர் ரெயில் நிலையம் நோக்கி ஊர்வலமாக வந்தனர். ரெயில் நிலைய வாசலில் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதைக்கண்டித்து விடு தலை சிறுத்தையினர் தரை யில் அமர்ந்து மறியலில் ஈடு பட்டனர். மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். போலீசார் அவர்களை சமர சப்படுத்தும் முயற்சியில் ஈடு பட்டனர்.
இந்த நிலையில் திருமாவளவன் குறுக்கு வழியாக தொண்டர்களுடன் ரெயில் நிலையத்துக்குள் புகுந்தார். சென்ட்ரலில் இருந்து ஆவடி நோக்கி சென்ற மின்சார ரெயிலை மறித்தார். தண்டவாளத்தில் தொண்டர்களுடன் அமர்ந்த அவர் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை முழங்கினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
திருமாவளவன் உள்பட தொண்டர்களை கைது செய்தனர்.
நிர்வாகிகள் பாவரசு, இளஞ்சேகுவாரே, பாலசிங்கம், சவுந்தர், எஸ்.எஸ். பாலாஜி, கபிலன், வீர மூர்த்தி, கடம்பன், வீரராஜேந் திரன் உள்பட 300–க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
திருமாவளவனை போலீசார் வேனில் ஏற்றினர். அப்போது தொண்டர்கள் திருமாவளவன் இருந்த வேனை மறித்தனர். போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினார்கள். இதனால் போலீசாருக்கும் தொண்டர்களுக்கும் இடையே மோதல்– கைகலப்பு ஏற்பட்டது. தொண்டர்களை போலீசார் விரட்டியடித்து திருமாவளவனை போலீசார் அழைத்து சென்றனர்.
முன்னதாக திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:–
இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்திய அரசு சார்பில் யாரும் கலந்து கொள்ளக்கூடாது என்று தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு குரல் கொடுத்தனர்.
அ.தி.மு.க. கட்சியும் எதிர்ப்பு தெரிவித்தது. சட்ட சபையில் இது தொடர்பாக 2 முறை தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. ஆனால் இதை கண்டு கொள்ளாமல் தமிழ் மக்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்தும் வகையில் இந்தியா சார்பில் சல்மான் குர்ஷித் கலந்து கொண்டது கண்டிக்கத்தக்கது.
எங்கள் எதிர்ப்பை தெரிவிக்க விடுதலை சிறுத்தை சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் சார்மினார் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்த விடுதலை சிறுத்தையினர் 100 பேர் கைது செய்யப்பட்டனர்.


No comments:
Post a Comment