Sunday, November 24, 2013
இலங்கை::அனல்மின் நிலையம் அமைப்பதற்காக வர்த்தமானி மூலம் சம்பூர் பிரதேசத்தில் எக்காரணம் கொண்டும் மக்கள் குடியமர்த்தப்படமாட்டார்கள் என்பதை புரிந்து கொண்டு அவர்கள் வேறு இடங்களில் குடியேற விருப்பம் தெரிவிக்க வேண்டும் என புனர்வாழ்வு மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார் .
கூனித்தீவு வித்தியாலயத்தில் நடைபெற்ற மூதூர் குடியேற்றவாசிகளுக்கு கட்டிட நிர்மாணப் பொருட்களை கையளிக்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் .
மேலதிக அரசாங்க அதிபர் எஸ் . அருள்ராசா தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் சம்பூர் அனல் மின் நிலைய வேலைகள் அடுத்த வருடம் ஜனவரி மாதமளவில் ஆரம்பிக்கப்படவுள்ளன . இதற்கென சுமார் 500 ஏக்கர் நிலம் அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டுள்ளன . அனல் மின்னிலைய நிர்மாணப்பணிகள் மூன்று வருட காலத்துக்குள் பூர்த்தியாக்கப்பட்டு இப்பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் எட்டாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளன .
குறித்த அனல் மின் நிலையம் அமைக்கப்படவுள்ள பிரதேசம் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் வாழ்ந்த மக்களை குடியமர்த்த என்னால் ஆன முயற்சிகள் அனைத்தையும் மேற்கொள்வேன் . தற்பொழுது சம்பூர் தவிர்ந்த வேறு பகுதிகளில் மக்களை மீளக் குடியேற்றுவதற்கென அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது .
அரசாங்கம் தெரிவு செய்துள்ள பிரதேசங்களில் குடியேற விரும்புகின்றவர்களுக்கு பூரண வசதிகளைச் செய்து கொடுக்க அதிகாரிகளுடன் கதைத்து நடவடிக்கை எடுக்கவுள்ளேன் அத்துடன் சம்பூருக்கு சென்று வரும் போக்குவரத்துப் பிரச்சி னையையும் விரைவில் தீர்த்து வைப்பேன் எனவும் தெரிவித்தார் .

No comments:
Post a Comment