Sunday, November 17, 2013
புதுச்சேரி::இலங்கை தமிழர் பிரச்னையை முன்வைத்து, அரசியல் செய்ய வேண்டாம்' என,
தமிழக அரசியல் கட்சிகளுக்கு, மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி வேண்டுகோள்
விடுத்துள்ளார்.
இதுகுறித்து, அவர் நேற்று நிருபர்களிடம் கூறும்போது, "மத்திய
அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களின் வலியுறுத்தலை ஏற்று, இலங்கையில்
நடக்கும் காமன்வெல்த் மாநாட்டுக்கு, பிரதமர் மன்மோகன்சிங் செல்லவில்லை. வெளியுறவுத்
துறை
அமைச்சர் மற்றும் அதிகாரிகளும், மாநாட்டுக்கு செல்லக் கூடாது எனவும் அரசியல்
கட்சியினர் வலியுறுத்தினர். இதில், எனக்கு மாறுபட்ட கருத்து
உண்டு.ராஜிவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தப்படி, தமிழர்களுக்கு அதிகாரம் தரும் வகையில்,
அரசியலமைப்பு சட்ட திருத்தத்தை நிறைவேற்றவில்லை. தமிழக, காரைக்கால் மீனவர்கள்
இலங்கை கடற்படையால் தொடர்ந்து தாக்கப்படுகின்றனர். காரைக்கால், நாகை, ரமேஸ்வரம்
மீனவர்கள் 81 பேர், இலங்கை சிறையில் உள்ளனர். இவர்களது 41 படகுகளையும் இலங்கை அரசு
கையப்படுத்தி உள்ளது. இப்பிரச்னை தொடர்பாக, இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை
நடத்தப்பட வேண்டும். இதை கருத்தில் கொண்டுதான், வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான்
குர்ஷித், காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கை
சென்றுள்ளார்.
மீனவர்களை மீட்கவும், படகுகளை திரும்ப பெறவும், இலங்கை அதிபர்
ராஜப÷க்ஷவிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். மேலும், இலங்கை அரசுடன், மத்திய அரசு
பேச்சுவார்த்தை நடத்தினால்தான், அங்குள்ள தமிழர்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும்.
எனவே, இலங்கை தமிழர் பிரச்னையை முன் வைத்து, அரசியல் செய்ய வேண்டாம் என, தமிழக
அரசியல் கட்சிகளை கேட்டுக் கொள்கிறேன்.
இலங்கை மீனவர்களும், நமது மீனவர்களும்
பேச்சுவார்த்தை நடத்துவதற்கு, மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதுதொடர்பாக, தமிழக
அரசின் தலைமைச் செயலருக்கு, வெளியுறவு அமைச்சகம் கடிதம் எழுதியது. தமிழக அரசு
ஒப்புதல் தந்துள்ளதையடுத்து, வரும் டிசம்பர் மாதத்தில் பேச்சுவார்த்தை நடப்பதற்கு
வாய்ப்பு உள்ளது. இவ்வாறு நாராயணசாமி பேசினார்.

No comments:
Post a Comment