Thursday, November 14, 2013

2014: சிறிய நாடுகளை அபிவிருத்தி செய்யும் ஆண்டாக பிரகடனம்: பொதுநலவாய மாநாட்டு தீர்மானம் ஐ.நா.வுக்கு சிபார்சு செய்யப்படும்: கமலேஷ் சர்மா!

Thursday, November 14, 2013
இலங்கை::2014ம் ஆண்டை சிறிய தீவு நாடுகளை அபிவிருத்தி செய்யும் ஆண்டாக பிரகடனப்படுத்தும் தீர்மானத்தை பொதுநலவாய மாநாட்டில் நிறைவேற்றி ஐநா பொதுச்சபைக்கு சிபாரிசு செய்யவுள்ளதாக பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா தெரிவித்தார்.
 
பொதுநலவாய அமைப்பில் அங்கம் வகிக்கும் சகல நாடுகளும் சமமான உரிமைகளைக் கொண்டவையாகும். இங்கு எந்தவொரு நாட்டினதும் பரப்பையோ, பொருளாதார வசதியையோ அடிப்படையாகக் கொண்டு அதன் உரிமைகள் தீர்மானிக்கப்படுவதில்லை என்றும் கமலேஷ் சர்மா மேலும் தெரிவித்தார். பொதுநலவாய மாநாட்டின் உத்தியோகபூர்வ நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னரான முதலாவது விசேட செய்தியாளர் மாநாடு நேற்று மாலை 4.30 மணிக்கு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள ஊடக நிலையத்தில் நடைபெற்றது.
 
பொதுநலவாய அமைப்பின் பேச்சாளர் ரிச்சட் உக்குவின் வலிகாட்டலில் நடைபெற்ற இச் செய்தியாளர் மாநாட்டில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், மொரிசியஸ் நாட்டின் வெளிவிவகார அமைச்சர் டொக்டர் அர்வின் பூலல், பாபடோஸ் நாட்டின் வெளிவிவகார அமைச்சர் மெக்ஸின் மெக்லன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
இங்கு கமலேஷ் சர்மா தொடர்ந்தும் விளக்கமளிக்கையில், பொதுநலவாயம் அதில் அங்கம் வகிக்கும் சகல நாடுகளும் சமமாகவே மதிக்கப்படுகின்றது. இதனடிப்படையிலேயே சிறிய தீவு நாடுகள் பொருளாதார ரீதியில் பலமடைய வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து இந்த தீர்மானத்தை நிறைவேற்ற முடிவெடுத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
 
இதனடிப்படையில் பொதுநலவாயத்தில் அங்கம் வகிக்கும் சிறிய நாடுகளின் அமைச்சர்கள் கூட்டம் நேற்று காலை முதல் நடைபெற்றது. இதன் போதே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டதுடன் இது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. பொதுநலவாய அமைப்பில் அங்கம் வகிக்கும் 53 நாடுகளில் 32 நாடுகள் சிறிய நாடுகளாகும். இவ்வாறான பல நாடுகள் பொருளாதார ரீதியில் பல்வேறு நெருக்கடிகளை கொண்டிருப்பதை நன்கு அவதானிக்க முடிகிறது.
 
பல நாடுகள் நிதிச் சவால்களை எதிர்நோக்கியிருக்கின்றன. இந்த நாடுகளுக்கு கைகொடுத்து பொருளாதார ரீதியில் முன்னேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியது எமது பொறுப்பாகும். இதனை அடிப்படையாகக் கொண்டே இம்முறை நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் முன்னுரிமை அளித்து ஆராயப்படவுள்ளது. இன்று ஆரம்பமாகவுள்ள பொதுநலவாய அமைச்சர்கள் மட்ட செயற்பாட்டுக்குழு மற்றும் வெளிவிவகார அமைச்சர்கள் குழுக்கூட்டங்களில் இது தொடர்பில் சமர்ப்பித்து தலைவர்களின் உச்சிமாநாட்டில் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.
 
இலங்கையில் மனித உரிமைகள் பலப்படுத்துவது தொடர்பாக பொதுநலவாயம் அதிக அக்கறை கொண்டுள்ளதாக தெரிவித்தார். மனித உரிமைகள் ஆணைக்குழு இன நல்லிணக்கத்துக்கான தேசிய திட்டம், ஆகியன தொடர்பில் பொதுநலவாயத்திற்கூடாக இலங்கை ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு வந்திருக்கிறோம். இலங்கை மக்கள் இவற்றின் முன்னேற்றம் குறித்து விரைவில் அறிந்து கொள்வார் என்று நம்புகிறோம்.
இந்த ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மொரீசியஸ் நாட்டின் வெளிவிவகார அமைச்சர் டொக்டர் அர்வின் பலோல், தனது நாட்டின் பிரதமரை பிரதிநிதித்துவப்படுத்தியே கொழும்பில நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வருகை தந்துள்ளதாக கூறினார்.
 
அடுத்த உச்சிமாநாடு தமது நாட்டில் நடைபெறவுள்ளதால் பல்வேறு தகவல்களையும் அனுபவங்களையும் இம்முறை மாநாட்டின் போது பெற்றுக்கொள்ள முடியுமென அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியாளர் மாநாட்டில் பெரும் எண்ணிக்கையிலான உள்நாட்டு மற்றும் சர்வதேச ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment