Friday, November 22, 2013

இலங்கை கடற்படை சிறைபிடித்த மீனவர்களை விடுவிக்க கோரி புதுகை மீனவர்கள் ஸ்டிரைக் துவங்கியது ஒரே நாளில் 1 கோடி வர்த்தகம் பாதிப்பு!

Friday, November 22, 2013
மணமேல்குடி::மணமேல்குடி:இலங்கை கடற்படை பிடித்துச்சென்ற மீனவர்கள் 52 பேரையும் விடுவிக்க கோரி புதுக்கோட்டை மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை துவக்கினர். புதுக்கோட்டை மாவட் டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் துறைமுகங்களில் 2000க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். கடந்த அக்டோபர் 14ம் தேதி 15 மீனவர்களும்,  கடந்த 5ம் தேதி 17 மீனவர்கள், நேற்று முன்தினம் 20 மீனவர்கள் என மொத்தம் 52 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த மாதத்தில் 2வது முறையாக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.  சிறைபிடிக்கப்பட்ட 52 மீனவர்களையும், அவர்களது விசைபடகுகளையும் உடனடியாக விடுவிக்க கோரியும் மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மீனவர்கள் போராட்டத்தால் 1000க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ளது. இன்று மட்டும் சுமார் ரூ.1 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலையிழந்துள்ளனர். மீனவர் சங்க பிரதிநிதிகள் கூறுகையில், ‘இலங்கை கடற்படை கைது தொடர்வதால் மீனவர்கள் குடும்பங்கள் வறுமையில் வாடி வருகிறது. தமிழக, புதுச்சேரி மீனவர் சங்க பிரதிநிதிகள் 9 பேர் டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.

இதற்கு தீர்வு காண்பதாக பிரதமர் உறுதியளித்தார். இந்நிலையில் மீண்டும் இலங்கை கடற்படையின் அட்டூழியம் தொடர்கிறது.  மத்திய அரசு மீனவர்கள் பிரச்னையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மத்திய, மாநில அரசுகள் துரிதமாக நடவடிக்கை எடுக்கவேண்டும். அதுவரை போராட்டம் தொடரும்‘ என்றனர்.

No comments:

Post a Comment