Thursday, October 3, 2013

காமன்வெல்த் மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் தமிழர்களே அல்ல: சுதர்சன நாச்சியப்பன் பேட்டி!

Thursday, October 03, 2013
மதுரை::காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க, தமிழக அரசியல் தலைவர்கள் ஒருமித்த கருத்து தெரிவிக்க வேண்டும். அப்படி தெரிவிக்காதவர்கள், தமிழர்களே அல்ல,'' என, மத்திய இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் கூறினார்.

மதுரையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: இலங்கை வடக்கு மாகாணத்தில் நடந்த தேர்தலில், தமிழர் ஆதரவு பெற்ற விக்னேஷ்வரன் முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழர்களின் தற்போதைய நிலைமையை, காமன்வெல்த் மாநாட்டில் எடுத்துக்கூறுவதற்கு ஒரு நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மாநாட்டில் பங்கேற்பதன் மூலம், இதை இந்தியா பயன்படுத்திக்கொள்ள வேண்டும், என, பிரதமர் மன்மோகனிடம் விக்னேஷ்வரன் கேட்டுக்கொண்டு உள்ளார்.

மாநாட்டில், இந்தியா பங்கேற்காவிட்டால் அங்குள்ள தமிழர்களுக்கு துன்பம் ஏற்படுத்தும் வகையில் நிலைமை அமைந்து விடும். தற்போது தமிழர்களுக்கு கிடைத்துள்ள ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்கவில்லை என்றும் ஆகிவிடும். இதை தமிழக அரசியல் தலைவர்கள் புரிந்து கொண்டு, மாநாட்டில் இந்தியா பங்கேற்க, தமிழக அரசியல் தலைவர்கள் ஒருமித்த கருத்து தெரிவிக்க வேண்டும். அப்படி தெரிவிக்காதவர்கள், தமிழர்களே அல்ல, என்றார்.

No comments:

Post a Comment