Thursday, October 31, 2013

பிரித்தானிய பிரதமரின் யாழ்ப்பாண விஜயம் வரவேற்கப்பட வேண்டியது: பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ!

Thursday, October 31, 2013
இலங்கை::பிரித்தானிய பிரதமரின் யாழ்ப்பாண விஜயம் வரவேற்கப்பட வேண்டியது என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், இலங்கைக்கு எதிராக சர்வதேச யுத்தக்குற்றச் செயல் விசாரணைகளை வலியுறுத்தி நிற்கும் தரப்பினர், பிரித்தனரிய பிரதமர் டேவிட் கமரூனின் யாழ்ப்பாண விஜயத்தை பிழையாக பயன்படுத்திக்கொள்ளக் கூடுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் பிழையான தகவல்களை வெளியிடுவதற்கு இந்த சந்தர்ப்பத்தை புலி ஆதரவு தரப்பும், மனித உரிமை அமைப்புக்களும் பயன்படுத்திகொள்ளக் கூடுமென அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரதமர் கமரூன் யாழ்ப்பாணத்திற்கு மட்டுமன்றி வன்னியின் எந்தவொரு பகுதிக்கும் விஜயம் செய்ய முடியும் எனவும், அதனை வரவேற்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை ஆணையாளர் நவனீதம்பிள்ளை உள்ளி;ட்ட பல முக்கிய வெளிநாட்டுத் தலைவர்கள் யுத்த வலயத்திற்கு விஜயம் செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான வெளிநாட்டுத் தலைவர்களின் வடக்கு கிழக்கு விஜயம், புலிகளுக்கு ஆதரவான தரப்பினரதும் ஊடகங்களினதும் போலிப் பிரச்சாரங்களை முறியடிக்க பாரியளவில் உதவும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். உண்மையான கள நிலவரங்களை மக்களினால் புரிந்து கொள்ள வழியமைக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாள் புலிபோராளிகள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு எவ்வாறு சமூகத்துடன் மீள இணைக்கப்பட்டுள்ளார்கள் என்பதனை அனைத்து தரப்பினரும் புரிந்து கொள்ள வேண்டுமெனவும் வெளிநாட்டு ஊடகங்கள் இதனை கவனிக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். வெளிநாட்டுத் தலைவர்கள் வடக்கின் கள நிலமைகளை நேரில் பார்வையிடுவது மிகவும் சிறந்த விடயம் என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
 
tamil matrimony_INNER_468x60.gif

No comments:

Post a Comment