Sunday, October 27, 2013

வடமாகாணத்தில் பொலிஸாரின் உதவியுடன் வடமாகாண முதலமைச்சர் வடக்கில் சிவில் பாதுகாப்பு குழுக்களை ஏற்படுத்த வேண்டும்: கோத்தபய ராஜபக்ஷ!

Sunday, October 27, 2013
இலங்கை::வடமாகாணத்தில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவது முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரனின் பொறுப்பாகும். அவருக்கோ நாட்டில் உள்ள எந்தவொரு அமைச்சருக்கோ பொலிஸாருக்கு உத்தரவிடும் அதிகாரம் இல்லாத போதிலும் அவர்கள் பொலிஸாரின் உதவியை நாடினால் பொலிஸார் தயக்கம் காட்டாமல் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கும் முதலமைச்சர்களும் மனமுவந்து உதவி செய்வார்கள். பொலிஸாரின் உதவியை நாடி முதலமைச்சர் வடக்கில் சிவில் பாதுகாப்பு குழுக்களை ஏற்படுத்தி அங்கு இடம்பெறும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த உதவி செய்ய வேண்டும் என்று பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

வடமாகாண சபைக்கான தேர்தலில் முதலமைச்சராக மக்களால் தெரிவு செய்யப்பட்டிருக்கும் சி.வி.விக்னேஸ்வரன் மக்கள் தனக்கு அளித்த ஆணையை சரியான முறையில் நிறைவேற்றுவதற்காக அரசாங்க அமைப்புகளின் உதவியுடன் வடமாகாணத்தின் அபிவிருத்தி, கல்வி, சுகாதாரம் மற்றும் விவசாயம், கடற்தொழில் துறைகளை மேம்படுத்துவதற்கு செயற்படுவது அவசியமென்று பாதுகாப்பு செயலாளர் மேலும் தெரிவித்தார்.
இந்திய அரசியல்வாதிகள் குறிப்பாக தமிழ்நாட்டின் அரசியல்வாதிகள் இலங்கை நெருக்கடியை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி அரசியல் இலாபம் பெறும் எண்ணத்துடன் இன்று செயற்பட்டு வருகிறார்கள்.
எதற்கெடுத்தாலும் சுயநல நோக்கத்துடன் இலங்கை விவகாரத்தில் தலையிடும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியும் அடுத்தாண்டில் நடைபெறும் இந்தியப் பாராளுமன்றத் தேர்தலில் தங்கள் வாக்குப் பலத்தை அதிகரிக்கும் நோக்குடன் இலங்கைத் தமிழர்கள் மீது அக்கறையும் கவலையும் கொண்டவர்களைப் போன்று தங்கள் அரசியல் நாடகத்தை தற்போது மேடையேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
 
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தான் முதலமைச்சர் வேட்பாளராக 30 பெரும்பான்மை ஆசனங்களுடன் வடமாகாண சபைத் தேர்தலில் வெற்றியீட்டியவுடன் தான் சந்திக்கும் முதலாவது வெளிநாட்டு அரசியல் தலைவியாக தமிழ்நாட்டின் முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் போவதாக அறிவித்திருந்தார். அவரது அறிவித்தலைக் கேட்டு மனம் குளிர்ந்து போன ஜெயலலிதா அம்மையார் “வாருங்கள், என்னை வந்து சந்தியுங்கள்” என்று அதற்கு சாதகமான பதிலையும் அனுப்பி வைத்திருந்தார்.
 
முதலமைச்சராக திரு.விக்னேஸ்வரன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளக் கூடாதென்ற தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் ஓரணியினரின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் திரு.விக்னேஸ்வரன் வடமாகாணத்தை தொடர்ந்தும் அபிவிருத்தி செய்து அப்பகுதி மக்களுக்கு சிறந்த வாழ்வாதாரத்தை பெற்றுக் கொடுக்க வேண்டுமாயின் நாம் எதிர்ப்பு அரசியலை விட்டுக் கொடுத்து, இணக்கப்பாட்டு அரசியலை கையாள வேண்டுமென்ற உன்னத நோக்கத்துடன் அலரி மாளிகைக்கு வந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
 
இந்த விடயத்தை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் ஒருசாரார் இந்த முதலமைச்சர் இலங்கை அரசாங்கத்தின் கைப் பொம்மையாக மாறப் போகிறார் என்று போலியான தகவல்களை செல்வி. ஜெயலலிதாவுக்கு அனுப்பி வைத்ததனால் வடமாகாண முதலமைச்சரை வைத்து தனது வாக்குப் பலத்தை தென்னிந்தியாவில் அதிகரிக்க முடியுமென்ற நம்பிக்கையில் இருந்த ஜெயலலிதா அம்மையார் ஆத்திரமடைந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட திரு.விக்னேஸ்வரனை தான் சந்திக்கப் போவதில்லை என்று பகிரங்கமாக அறிவித்துவிட்டார்.
 
திரு.விக்னேஸ்வரன் தங்கள் பக்கம் சாரவில்லை என்ற ஏதோ ஆத்திரத்தில் கலைஞர் கருணாநிதி அவரைப் பொருட்படுத்தாமல் இந்தியப் பிரதம மந்திரிக்கு எழுதிய கடிதத்தில் நீங்கள் எக்காரணம் கொண்டும் கொழும்பில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் அரசாங்கத்தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளலாகாது என்று வலியுறுத்தியுள்ளார்.
இத்தகைய அழுத்தங்களின் காரணமாக கொழும்பு மகாநாட்டில் பிரதம மந்திரி கலந்து கொள்வதா அல்லது அவரது சார்பில் பிரதி ஜனாதிபதி கலந்து கொள்வாரா என்ற சர்ச்சை எழுந்துள்ள போதிலும் இதுவரையில் அது சம்பந்தமாக தீர்க்கமான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதேவேளையில் அடுத்தாண்டு இந்தியாவின் பொதுத் தேர்தலில் ஆளும் இந்திய காங்கிரஸை தோற்கடித்து அதிகாரத்தைக் கைப்பற்றும் நிலையிலுள்ள பாரதிய ஜனதா கட்சியின் பிரதம வேட்பாளரும் குஜராத் மாநிலத்தின் முதல்வருமான நரேந்திர மோடி, முதல் தடவையாக இலங்கைத் தமிழர்கள் பற்றி ஆதரவான கருத்தை அறிவித்துள்ளார். இலங்கைத் தமிழர்கள் உட்பட அயல்நாடுகளில் வாழும் இந்திய வம்சாவளியினரை இந்திய அரசு காப்பாற்ற வேண்டும். இந்தியா தனது குடிமக்களை காப்பாற்றுவதுடன் ஏனைய நாடுகளில் உள்ள நமது மக்களையும் பாதுகாக்க வேண்டும், என்றும் திரு. நரேந்திர மோடி அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் தமது கட்சிக்கு தமிழ்நாட்டு மக்களின் பெரும்பான்மையான ஆதரவை பெறும் நோக்கத்துடன் தெரிவித்திருக்கிறார்.
 
தற்போது இரண்டு தடவைகள் தமிழ்நாட்டுக்கு விஜயம் செய்துள்ள நரேந்திர மோடி, சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போது, வெளிநாடுகளில் வாழும் இந்திய வம்சாவளி மக்களின் கடவுச்சீட்டுகள் வேறு நிறத்தில் அமைந்திருந்தாலும் எங்கள் அனைவரதும் இரத்தத்தின் நிறம் ஒன்றுதான் என்று இனவாத அடிப்படையில் தனது அரசியல் தந்திரத்தை கையாண்டிருக்கிறார்.
 
தமிழ்நாட்டுக்கு வரும் போது தமிழருக்கு ஆதரவாக பேசினாலும் அவர் வடஇந்தியா திரும்பியவுடன் இந்துமத அடிப்படைவாதியாகவே அரசியல் நடத்துகிறார் என்று அரசியல் அவதானிகள் கூறுகிறார்கள்.
வடமாகாண முதலமைச்சரின் நல்லெண்ணத்தைப் புரிந்து கொள்ளாமல் அவரது முற்போக்கு செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடும் விதத்தில் இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, கொழும்பில் நடைபெறவுள்ள முதலமைச்சர்கள் கூட்டத்தில் திரு.விக்னேஸ்வரன் கலந்து கொள்வதை பகிரங்கமாக எதிர்ப்புத் தெரிவித்து இந்த முதலமைச்சர் கூட்டத்தில் வடமாகாண முதலமைச்சரை பங்கு கொள்ளச் செய்யும் முயற்சியானது தங்கள் ஒற்றையாட்சி சிந்தனையை ஏனைய தேசிய இனங்கள் மீது திணிக்கும் அரசாங்கத்தின் முயற்சியென்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
இதன் மூலம் திரு.விக்னேஸ்வரன் முதலமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு வடமாகாணத்தின் மேம்பாட்டுக்கு நடவடிக்கை எடுப்பதை தடுப்பதே அவரது குறிக்கோளாக இருக்கிறதென்று அரசியல் அவதானிகள் கண்டனம் தெரிவிக்கிறார்கள். மக்களுக்காக சேவைசெய்வோம் என சபதம் செய்துகொண்ட வர்கள் இறுதியில் பதவி மோகத்தில் இவ்வாறு நடந்துகொள்வது மிகவும் துரதிஷ்டமான விடயமென்றும் எதிர்காலத்தில் இவ்வித நிகழ்வுகள் தொடராமல் இருப்பதுடன் அவ்விதம் சிலர் தன்னிச்சையாக செயற்பட்டால் அம்முயற்சி களை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் திரு. மாவை சேனாதிராஜா மேலும் தெரிவித்துள்ளார்.
திரு. மாவை சேனாதிராஜாவும் இக்கருத்தை ஏற்றுக்கொள்ள மறுத்த திரு.விக்னேஸ்வரன் “ஒரு இலட்சத்து 33ஆயிரம் விருப்பு வாக்குகளைப் பெற்று முதலமைச்சராக தெரிவான எனக்கு எவரும் ஆலோசனை வழங்க வேண்டிய அவசியம் இல்லை” என்று கூறியிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
 
திரு.விக்னேஸ்வரன் தமது கட்சிக்கு வாக்களித்த மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு எதற்கெடுத்தாலும் எதிர்ப்புத் தெரிவிக்கும் நிலைப்பாட்டைத் தவிர்த்துக் கொண்டு பிரச்சினைகளை சம்பந்தப்பட்டவர்களுடன் பேசித் தீர்த்து வடமாகாணத்தை அபிவிருத்தி செய்யும் தனது முடிவை எக்காரணம் கொண்டும் மாற்ற முடியாது என்று எல்லோருக்கும் புரியக் கூடிய வகையில் அறிவித்துள்ளார்.
 
இணக்கப்பாட்டு அரசியலை திரு.விக்னேஸ்வரன் கடைப்பிடித்தாலும் அரசாங்கத்திற்குக் கூட சொல்லவேண்டிய விடயங்களை ஒளிவு மறைவின்றி அப்பட்டமாக அறிவிக்கும் நேர்மையையும் கொண்டுள்ளார். பொதுநலவாய உச்சிமாநாட்டை முன்னிட்டு நற்செய்திகளை பத்திரிகைகளுக்கு விடுப்பதால் நன்மை எதுவும் ஏற்படாது, வடக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்றும் நடவடிக்கையில் அரசாங்கம் உண்மையாகவே ஈடுபட வேண்டும் என்று கூறியிருக்கிறார் இராணுவப் பேச்சாளரான பிரிகேடியர் ருவன் வணிகசூரியா யுத்தத்தின் போது வடபகுதியில் 45ஆயிரம் இராணுவத்தினர் தற்போது 15,000 மாக குறைக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று தெரிவித்த கருத்துக்கே திரு.விக்னேஸ்வரன் மேற்கண்ட பதிலை அளித்துள்ளார்.
 
இதேவேளையில் எதற்கெடுத்தாலும் கருத்துக்களைத் தெரிவிக்கும் அமைச்சர் மேர்வின் சில்வா வடமாகாணத்தில் ஜனநாயக அடிப்படையில் புதிய நிர்வாகம் ஏற்படுத்தப்பட்டுள்ள இன்றைய சூழ்நிலையில் அமைதியின்மையைத் தோற்றுவிப்பதற்கு முயற்சி செய்தால் அல்லது எல்லைமீறினால் நான் ஒருவிநாடி கூட பொறுமை காக்க மாட்டேன் என்று எச்சரிக்கை செய்துள்ளார்.
 
எஸ். தில்லைநாதன்...

No comments:

Post a Comment