Wednesday, October 16, 2013

வட மாகாண சபைத் தேர்தலின் பின்னர் இராணுவத்தினரைச் சீண்டும் செயற்பாடுகள் அதிகரிப்பு: இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரல் தயா ரத்நாயக்க!

Wednesday, October, 16, 2013
இலங்கை::நாட்டைப் பிளவுபடுத்தும் நிலை ஏற்பட்டால், இராணுவம் அதனைத் தடுக்க, பதிலடி கொடுக்க எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்தார்.

வன்னிப் பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் நேற்று  இடம்பெற்ற சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் நாம் பதுங்கு குழிகளில் இருக்கும் போது எமக்கு எதிரான நடவடிக்கைகளை சிலர் மேற்கொண்டனர்.

அத்துடன் இராணுவத்தினரை நோகடிக்கும் செயற்பாடுகளை அவர்கள் முன்னெடுத்தனர். அப்போதெல்லாம், எமது இராணுவத்தினர் மிகவும் அமைதியாகவும் பக்குவமாகவும் செயற்பட்டனர் என அவர் குறிப்பிட்டார்.

அதன் பின்னர் புலி பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டிய தேவை ஏற்பட்ட போது, எமது இராணுவத்தினர் மிகவும் சிறப்பாகச் செயற்பட்டு நாட்டுக்கான பணியை மேற்கொண்டு பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்தனர் என ஜெனரல் தயா ரத்நாயக்க சுட்டிக் காட்டினார்.

இதன் பின்னர் இடம்பெற்ற வட மாகாணசபைத் தேர்தலில் அரசு தோல்வியடைந்தது. மக்களுக்காக இராணுவத்தினர் பெரும் சேவைகளை செய்த போதிலும் அரசுக்கு தோல்வி ஏற்பட்டுள்ளதாக சிலர் தெரிவித்தனர்.

ஆனால் நாம் அரசியலுக்கு அப்பால் இந்த நாட்டின் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதில் வெற்றி கண்டுள்ளோம் என்பதில் பெருமையடைகின்றோம் என இராணுவத் தளபதி கூறினார்.

தேர்தலின் பின்னர் இராணுவத்தினரைச் சீண்டும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. அவ்வாறான நிலை ஏற்பட்டு நாடு பிளவுபடும் நிலைமை தோன்றினால் எமது இராணுவம் அதனைத் தடுக்க தயாராக இருக்க வேண்டும் என இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்..    

No comments:

Post a Comment