Thursday, October 03, 2013
இலங்கை::நாட்டில் பிரிவினைவாத யுத்தம் முடிவடைந்தும் இலங்கை ஒரே நாடாக உள்ளதா? என்பதில் சந்தேகமே நிலவுகின்றது. பிரபாகரன் இறந்த போதிலும் வடக்கின் அரசியல் தலைவர்கள் நாட்டை பிளவுபடுத்தவே செயற்படுகின்றனர் என்று இலங்கை இராணுவ வீரர்களின் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
எமது இராணுவத்தினரின் குறைபாடுகளை அரசாங்கத்தின் அனுமதியின்றி சர்வதேசத்திடம் முறையிடுவதும் குற்றச் செயலாகவே கருத வேண்டும் எனவும் அந்த சங்கம் தெரிவித்தது.
இலங்கை இராணுவ வீரர்கள் சங்கத்தினால் கொழும்பு நிப்பொன் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின் போதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர். இது தொடர்பாக இலங்கை இராணுவ வீரர்கள் சங்கத்தின் பிரதிநிதி மேஜர் ஜகத் வீரதுங்க தெரிவிக்கையில்,
முப்பது வருட கால பிரிவினைவாத யுத்தத்தினை முறியடித்து புலிகளிடம் இருந்து நாட்டினைக் காப்பாற்றியும் இன்றும் வடக்கினை பிரிப்பதற்கான சதிச் செயலிலேயே தமிழ் அரசியல் தலைமைகள் செயற்பட்டு வருகின்றன.
இனியொரு யுத்த சூழல் ஏற்பட்டால் அதற்கு முகங்கொடுக்கக் கூடிய நிலைமை இராணுவத்தினருக்கு இல்லை. ஏனெனில் கடந்த 30 வருட கால யுத்தத்தில் எமது இராணுவத்தினர் பலரை நாம் இழந்துவிட்டோம் மேலும் பலர் யுத்தத்தில் தமது உடல் அவயவங்களை இழந்து அங்கவீனர்களாக வாழ்கின்றனர். எனவே, யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாத்து சமூகத்தில் அவர்களுக்கான அங்கீகாரத்தினை பெற்றுக் கொடுக்கும் செயற்பாட்டையே இன்று நாம் செய்ய வேண்டும்.
மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த போது இலங்கையின் இராணுவ அமைப்புகளின் ஒன்றான யுத்தத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பு மனித உரிமைகள் ஆணையாளரிடம் பல முறைப்பாடுகளை செய்துள்ளது.
இலங்கை இராணுவ வீரர்களின் அசெளகரியங்கள் தொடர்பில் முதலில் அரசாங்கத்துடன் பேசி தீர்வொன்றினை எடுக்க முடியும். எனினும், அரசாங்கத்தின் அனுமதியின்றி இராணுவத்தினரின் பாதகச் செயற்பாடுகளை சர்வதேசத்திடம் முறையிடுவதானது இராணுவத்தினரின் தியாகத்தினையும் அர்ப்பணிப்பினையும் அவமானப்படுத்தும் செயற்பாடாகும்.
யுத்தத்தில் பாதிக்கப்பட்ட இராணுவ வீரர்களை இணைத்து அவர்களின் எதிர்கால நலன்களுக்காக செயற்படுவதும் அவர்களால் செய்யக்கூடிய வகையிலான தொழிலை வழங்குதல் மற்றும் நிதி, வாழ்வாதார உதவிகளை வழங்குவதே எமது சங்கத்தின் நோக்கமாகும். இதை மேலும் விஸ்தரித்து நாடளாவிய ரீதியில் அந்தஸ்தானதொரு அமைப்பாக மாற்றும் செயற்பாட்டில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றோம்.
மேலும், தற்போது எமது சங்கத்தில் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட இராணுவ வீரர்களின் 350 பேர் அங்கத்துவம் வகிக்கின்றனர். இதை மேலும் விஸ்தரித்து மேலும் இராணுவ வீரர்களை இணைத்துச் செயற்படவே நாம் எதிர்பார்க்கின்றோம்.
எனவே, அரசாங்கம் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு இராணுவ வீரர்களுக்கான அந்தஸ்தினை சமூகத்தில் ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

No comments:
Post a Comment