Monday, October 21, 2013

கூட்டமைப்பு கடைப்பிடித்த முரண்பாட்டு அரசியலை ஒதுக்கிவிட்டு இணக்கப்பாட்டு அரசியல் மூலம்: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன் இணக்கப்பாட்டு அரசியலை மேற்கொள்ளவேண்டும்!

Monday, October 21, 2013
இலங்கை::பல்லாண்டு காலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடைப்பிடித்த முரண்பாட்டு அரசியலை ஒதுக்கிவிட்டு இணக்கப்பாட்டு அரசியல் மூலம் வட பகுதி மக்கள் தங்களுக்கு அளித்த ஆணையை சிறப்பாக நிறைவேற்றுவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன் இணக்கப்பாட்டு அரசியலை மேற்கொண்டு வட மாகாணத்தின் அபிவிருத்திக்கும் மக்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்கும் வட மாகாண முதலமைச்சர் திரு. சி. வி. விக்னேஸ்வரன் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் மாத்திரமன்றி தென் இந்தியாவிலிருந்தும் தென்னிலங்கையிலிருந்தும் அநாவசிய மாக முட்டுக்கட்டைகள் இப்போது போடப்படுவது வேதனையை அளிக்கிறது.
 
திரு. விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட மாகாண சபைத் தேர்தலில் பெரும்பான்மை ஆசனங்களுடன் வெற்றியீட்டியதை அடுத்து அவர் தமிழ் நாட்டின் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை சந்தித்து மீனவர் பிரச்சினை உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதற்கு விருப்பம் தெரிவித்திருந்தார். அந்த யோசனையை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்ட செல்வி ஜெயலலிதா திரு. விக்னேஸ்வரனை சந்திப் பதற்கு காலத்தை ஒதுக்கித் தருவதற்கு அன்று இணக்கம் தெரிவித்திருந்தார்.ஜனாதிபதி அவர்கள் முன்னிலையில் திரு. விக்னேஸ்வரன் முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டதைப் பார்த்த ஜெயலலிதா ஆத்திரமடைந்து தான் இனிமேல் திரு. விக்னேஸ் வரனை சந்திக்க தயாராக இல்லை என்று இப்போது மறுப்புத் தெரிவித்துள்ளார்.
 
இதற்கு முன்னர் திரு. விக்னேஸ்வரன் தான் முதலாவதாக சந்திக்கும் வெளிநாட்டு அரசியல் பிரமுகர் ஜெயலலிதா தான் என்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. செல்வி ஜெயலலிதாவின் இந்த மன மாற்றத்திற்கு கூட்டமைப் பிலுள்ள சில சக்திகள் ஜெயலலிதாவின் காதுகளுக்கு தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் தகவல்களை கொடுத்ததே காரணமென்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.இவ்விதம் ஜெயலலிதா திரு. விக்னேஸ்வரனை சந்திக்க மறுப்புத் தெரிவித்ததன் மூலம் அவர் ஐக்கிய இலங்கையின் கீழ் தமிழர் பிரச்சினை தீர்க்கப்படுவதை விரும்பவில்லை என்பதையும் பிரிவினைவாதத்தையே ஆதரிக்கிறார் என்பதையும் எடுத்துக் காட்டுகிறது என்று அரசியல் விமர்சகர்கள் மேலும் கண்டனம் தெரிவித்தனர்.
 
இதேவேளையில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் ஒரு சாரார் விக்னேஸ்வரன் அவர்களின் மாறுபட்ட அரசியல் செயற் பாடுகளுக்கு மறைமுகமாக எதிர்ப்புத் தெரிவிக்க ஆரம்பித் திருப்பதும் வேதனையை அளிக்கிறது. யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமான மாவை சேனாதிராஜா கொழும்பில் நடை பெறவுள்ள முதலமைச்சர்களின் மாநாட்டில் வட மாகாண முதல்வரையும் பங்குகொள்ளச் செய்யும் முயற்சியானது தங்களின் ஒற்றையாட்சி சிந்தனையை ஏனைய தேசிய இனங்கள் மீது திணிக்கும் ஒரு முயற்சி என்று அறிவித்துள்ளார்.பரவலாக முதலமைச்சர்கள் எடுக்கும் தீர்மானங்களை வட மாகாணத்துக்கும் திணிப்பதற்கு எடுக்கும் ஒரு முயற்சியாகவே இந்த முதலமைச்சர்கள் மாநாடு அமைந்துள்ளதென்றும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.மக்களுக்காக சேவைசெய்வோம் என சபதம் செய்துகொண்டவர்கள் இறுதியில் பதவி மோகத்தில் இவ்வாறு நடந்துகொள்வது மிகவும் துரதிர்ஷ்டமான விடயமென்றும் எதிர்காலத்தில் இவ்வித நிகழ்வுகள் தொடராமல் இருப்பதுடன் அவ்விதம் சிலர் தன்னிச்சையாக செயற்பட்டால் அம்முயற்சிகளை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் திரு. மாவை சேனாதிராஜா அறிவித்துள்ளார்.
 
இதேவேளையில் அடுத்தாண்டு இந்தியாவில் பொதுத் தேர்தலில் ஆளும் இந்திய காங்கிரஸை தோற்கடித்து அதிகாரத்தைக் கைப்பற்றும் நிலையிலுள்ள பாரதிய ஜனதாக் கட்சியின் பிரதமர் வேட்பாளரும் குஜராத் மாநிலத்தின் முதல்வருமான நரேந்திர மோடி முதல் தடவையாக இலங்கை தமிழர்கள் பற்றி ஆதரவான கருத்தை அறிவித்துள்ளார். இலங்கை தமிழர்கள் உட்பட அயல்நாடுகளில் வாழும் இந்திய வம்சாவளியினரை இந்திய அரசு காப்பாற்ற வேண்டும். இந்தியா தனது குடிமக்களை காப்பாற்றுவதுடன் ஏனைய நாடுகளில் உள்ள நம் மக்களையும் பாதுகாக்க வேண்டும். அந்த மக்கள் வேறு நிறத்தில் கடவுச்சீட்டுக்களை வைத்திருக்கலாம். ஆனால் நாம் அனைவரினதும் இரத்தத்தின் நிறம் ஒன்றுதான் என்றும் திரு. நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார்.திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கலைஞர் கருணாநிதியும் தொடர்ந்தும் இலங்கைக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடிய வகையில் இந்திய பிரதம மந்திரிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கொழும்பில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது என்றும் அறிவித்துள்ளார்.
 
இதிலிருந்து அடுத்தாண்டு இந்திய பொதுத் தேர்தலில் இலங்கைத் தமிழர் பிரச்சினையை முன்வைத்து இந்திய அரசியல் கட்சிகள் மக்களை ஏமாற்றி வாக்குகளை அபகரிக்க முயற்சி செய்கின்றன என்பது தெட்டத்தெளிவாக புரிகின்றது.தென்னிலங்கையில் உள்ள ஒரு இனவாத அமைப்பான தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவுடன் இணைந்து தமிbழத்தை அமைக்க முயற்சி செய்கின்றது என்றும் இது புலிகளின் செயற்பாட்டைவிட மோசமானது என்றும் அறிவித்துள்ளது.இத்தகைய கருத்துக்கள் வட மாகாணத்தின் முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரனின் நல்லெண்ணத்தை பலவீனப்படுத்தும் முயற்சியாகவிருந்தாலும் அவர் திடமான போக்கில் தனது நற்பணியை மேற்கொள்வார் என்ற நம்பிக்கை அவரை ஆதரித்த மக்களுக்கு இருக்கிறது.

No comments:

Post a Comment