Thursday, October 03, 2013
இலங்கை::முல்லைத்தீவு கடலில் கடற்படையினர் மீதான தாக்குதலுக்கு தலைமைத்துவம் வழங்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு வவுனியா மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கொன்றில் சந்தேக நபர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம் இதற்கான தீர்ப்பினை வழங்கினார்.
பருத்தித்துறை புலோலியைச் சேர்ந்த செல்லப்பா இன்பகுமார் (37) என்பவர் மீது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குறித்த வழக்கு வவுனியா மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்தது.
2001 செப்டெம்பர் மாதத்திற்கும் நவம்பர் மாதத்திற்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் சந்தேக நபர் செல்லப்பா இன்பகுமார் முல்லைத்தீவு கடற்புலிகள் பிரிவில் பதில் கடற்புலிகள் தலைவராக செயற்பட்ட போது கடற்படையினர் மீதான தாக்குதலுக்குத் தலைமை வகுத்தார் என்ற குற்றச்சாட்டில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தார்.
வழக்கு தொடுநரான சட்டமா அதிபரால் சந்தேக நபரின் ஒப்புதல் வாக்கு மூலம் மட்டுமே குற்றச்சாட்டுக்கான சாட்சியமாக முன் வைக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு விசாரணை வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது சந்தேகநபர் செல்லப்பா இன்பகுமார் ஒப்புதல் வாக்கு மூலத்தை சுயமாக வழங்கவில்லையென்பது உறுதிப்படுத்தப்பட்டதால் ஒப்புதல் வாக்கு மூலத்தை சாட்சியமாக ஏற்க நீதிமன்றம் அனுமதி வழங்காது நிராகரித்தது.
இந்நிலையில் குற்றச்சாட்டை நிருபிக்க வேறு சாட்சியங்களின்மையால் சந்தேக நபரை குற்றச்சாட்டிலிருந்து விடுதலை செய்வதாக நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம் தீர்ப்பு வழங்கினார்.

No comments:
Post a Comment