Tuesday, September 10, 2013
இலங்கை::பொலிஸ் அதிகாரம், காணி அதிகாரம் வட மாகாண சபைக்கு வேண்டும் என்று குரல் எழுப்பி வரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் அரசாங்கம் அதனையும் விட கூடுதலான அதிகாரமுடைய தீர்வொன்றை முன்வைத்த போது, அதனை நிராகரித்தனர். இன்று அவர்கள் அதே அதிகாரங்களை கேட்பதைப் பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு 13வது சட்டத் திருத்தத்தின் கீழ் காணி, பொலிஸ் அதிகாரங்களையும் கேட்கின்ற போதிலும், சமாதானத் தீர்வொன்றின் மூலம் அந்த அதிகாரங்களை முன்னைய அரசாங்கங்கள் கொடுக்க முன்வந்த போது புலிகள் இயக்கத்திற்குப் பயந்து அத்தகைய தீர்வுகளை ஏற்றுக் கொள்ளவில்லை என்று டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
யாழ்ப்பாணப் பகுதியில் மாணிப் பாயில் அரசியல் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் இன்று தமிழ் தேசியக்கூட்டமைப்பும் தமிழ் அரசியல் தலைவர்களும் மாகாண சபைக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் வேண்டும் என்று கேட்பதன் மூலம் மக்களைத் தூண்டிவிட்டு அதன் மூலம் அரசியல் லாபம் திரட்ட எத்தனிக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டார்.
எனவே இத்தகைய உணர்வு பூர்வமான ஆத்திரமூட்டக் கூடிய உரை களை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மேடைகளில் நிகழ்த்தினாலும் தாம் அவற்றைப் பொருட்படுத்தாமல் தொட ர்ந்தும் எமது அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
பல்லாண்டு காலம் நீடித்துக்கொண்டிருந்த பலதரப்பட்ட பிரச்சினைகள் இன்று அரசாங்கத்தினால் சமாதானமான முறையில் தீர்த்து வைக்கப்படுவதாக தெரிவித்த அமைச்சர் தமிழ் தேசியக்கூட்டமைப்பு நீண்ட காலம் பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகித்த போதிலும் கடந்த காலத்தில் அவர்களின் அதிகாரத்தில் உள்ள வடக்கு, கிழக்கில் உள்ள சுமார் 20 உள்ளூராட்சி மன்றங்களின் மூலம் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாத கையாலாகாத நிலையில் இருந்ததாக தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை வடபகுதி மக்கள் அதிகார பீடத்தில் அமர்த்த வேண்டும் என்றும் அதன் மூலமே வடமாகாணத்தின் பிரச்சினைகளை சுமுகமாக நெறியான முறையில் தீர்த்து வைக்கமுடியும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment