Tuesday, September 10, 2013

இலங்கைக்கு போர் கப்பல்கள் வழங்கும் விவகாரம்: மத்திய அமைச்சர் நாராயணசாமி விளக்கம்!

Tuesday, September 10, 2013
சென்னை::இலங்கைக்கு வழங்கப்படும் போர் கப்பல்களை தமிழர்களின் நலனுக்கு எதிராக பயன்படுத்தினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி விளக்கமளித்துள்ளார்.
 
தற்போது இலங்கைக்கு வழங்கப்பட உள்ள போர் கப்பல் ஏற்கனவே அந்நாட்டுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி வழங்கப்பட உள்ளதாகவும் கூறியுள்ளார். இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்க கூடாது என்று தமிழக தலைவர்களிடமிருந்து கடிதங்கள் வந்துள்ளதாகவும் கூறியுள்ளார். இதுகுறித்து பிரதமர் பரிசீலனை செய்வார் என்றும் நாராயணசாமி கூறினார். இலங்கையை எதிரிநாடு என்று அறிவிக்க தமிழக கட்சிகள் கோரினால் அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழக மீனவர்களை எப்படி மீட்பது என்று நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கை தொடர்பாக மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்த கருத்துகள் ஏற்புடையதல்ல என்றும் அவர் கூறினார். ஒருங்கிணைந்த இலங்கை என்ற கோட்பாட்டில் இந்தியா உறுதியுடன் உள்ளதாக குறிப்பிட்ட நாராயணசாமி, சிங்களர்களுக்கு இணையான உரிமை தமிழர்களும் கிடைக்கும் என்பதை இந்தியா உறுதிபடுத்தும் என்றும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment