Tuesday, September 10, 2013

தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணியில்லை: காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலர் டி.சதீசன்!

Tuesday, September 10, 2013
சென்னை::தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணி முறிந்துவிட்டதாகவும், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவு செய்ய இன்னும் 7 மாதங்கள் இருப்பதாகவும், காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலர் டி.சதீசன் தெரிவித்தார்.

நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக திங்கள்கிழமை உதகை வந்திருந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

தமிழகத்தில் கட்சியை வலுப்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இக்கூட்டங்களில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில்  கூட்டணி தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலானோர் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் தனித்தே போட்டியிட வேண்டுமெனவும், அதற்கடுத்து திமுகவுடனோ அல்லது தேமுதிகவுடனோ இணைந்து போட்டியிடலாமெனவும் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பான கருத்துகள் கட்சியின் பொதுச்செயலர் ராகுல் காந்தியிடம் ஒப்படைக்கப்பட்டு இறுதி முடிவெடுக்கப்படும்.

தமிழகத்தில் நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு ஏற்ற மாவட்டங்கள் என்பதால் இத்தகைய மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சியே போட்டியிட வேண்டுமென்பதே பெரும்பான்மையான தொண்டர்களின் கோரிக்கைகள் என்பதால் இதுதொடர்பாகவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் அமைப்பு ரீதியாக வலுவுடன் உள்ளது.

காமராஜர் ஆட்சிக்கு பின்னர் தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வராததற்கு தமிழகத்தில் மாநில கட்சிகளின் வளர்ச்சியும், காங்கிரஸ் கட்சிக்குள்ளான கோஷ்டி பூசல்களுமே காரணம்.

தமிழகத்தில் உணவுப் பாதுகாப்பு மசோதா அமல்படுத்தப்படுவதன் மூலமாக தமிழக அரசு ஆண்டுக்கு ரூ.1,000 கோடி வரை சேமிக்க முடியும்.
இந்த தொகையால் தமிழகத்தில் வேறுபல வளர்ச்சித் திட்டங்களையும் நிறைவேற்ற முடியுமென்பதால் உணவு பாதுகாப்பு சட்டத்துக்கு தமிழக அரசு ஆதரவளிக்க வேண்டும்.

முல்லைப்பெரியாறு அணை பிரச்னை தொடர்பாக கேரள அரசு உச்சநீதிமன்ற உத்தரவுகளை கடைபிடிக்க வேண்டும். அதேபோல தமிழகத்துடனான வெளி மாநில நதிநீர் பிரச்னைகளையும், மீனவர் பிரச்னைகளையும் சுமூகமான முறையிலேயே தீர்த்துக்கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment