Wednesday, September 04, 2013
இலங்கை::தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி சுரேஷ் பிரேமச்சந்திரன் மீண்டும் ஆயுத கலாசாரம் தலைதூக்கும் விதத்தில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இது இலங்கை அரசியலமைப்பை மீறும் செயலாகும். இது தொடர்பில் அரசாங்கம் எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன? என்று அரசாங்கத்தின் பங்காளி கட்சியான ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் ஒமல் பே சோபித தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.
வட மாகாண தேர்தலின் பின் கூட்டமைப்பு பிரிவினை வாதத்திற்கு செல்லும் என்று நாம் அன்றே சொன்னோம். இன்று அது மெய்ப்பிக்கப்பட்டுள்ளதென்றும் தேரர் தெரிவித்தார்.
இது தொடர்பாக ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் ஒமல் பே சோபித தேரர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
தமிழர்கள் மீண்டும் ஆயுதங்களை கையிலெடுத்தால் சமஷ்டி முறைக்கு அப்பாற்சென்று ஆட்சி அதிகாரத்தை பெற்றுக்கொள்ள முடியுமென சுரேஷ் பிரமேச்சந்திரன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
இது அரசாங்கத்திற்கு எதிரான இலங்கை அரசியலமைப்பை மீறும் கருத்தாகும். பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு நான்கு வருடங்கள் கழிந்த பின்னர் வட மாகாண சபை தேர்தல் நடாத்தப்படும் தறுவாயில் இவ்வாறான ஒரு கருத்து தெரிவித்திருப்பது புலிகளின் கருத்துக்களை தொடர்ந்து முன்னெடுக்கும் செயலாகும்.
நவநீதம்பிள்ளை இலங்கை வருகையும் இலங்கைக்கு எதிரான அறிக்கையை இந்த மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. சபை கூட்டத்தில் சமர்ப்பிப்பதற்கான ஏற்பாடாகும்.
இலங்கை வருகையின் பின்னரும் எமது நாடு தொடர்பான அவரது கொள்கையில் மாற்றங்கள் ஏற்படவில்லை என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான ஒரு நிலைமை ஏற்படும் என்று ஏற்கனவே அரசாங்கத்திற்கு அறிவித்திருந்தோம் என்று தேரர் தெரிவித்திருந்தார்.

No comments:
Post a Comment