Monday, September 23, 2013
இலங்கை::அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியுடன் இணைந்து செயற்பட வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடைந்துள்ள வெற்றியை அரசாங்கம் பயன்படுத்திக் கொண்டு இணைந்து செயற்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
மிக முக்கியமான தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈட்டிய வெற்றிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார். வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி பாராட்டுவதாகத் தெரிவித்துள்ளார். வடக்கிலும் ஓர் ஆசனத்தை தமது கட்சி கைப்பற்றியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மாகாணசபைகளில் எந்தவொரு தரப்புடனும் கூட்டிணையாது, சுயாதீனமாக செயற்பட திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ஒட்டுமொத்தமாக தேர்தல்கள் சுயாதீனமானதும் நீதியானதுமான முறையில் நடைபெற்றது எனவும், ஒரு சில முறைகேடுகளும் வன்முறைகளும் இடம்பெற்றதனை மறுப்பதற்கில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வட மாகாண மக்கள் முதல் தடவையாக தங்களது வாக்குரிமையை பயன்படுத்திய விதம் ஒட்டுமொத்த நாடும் அடைந்த வெற்றியாக கருதப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். மக்களின் ஆணையினால் தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் இணைந்து செயற்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:
Post a Comment