Monday, September 16, 2013

ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு அத்வானிக்கு கொலை மிரட்டல் இன்டர்நெட்டில் ஆடியோ வெளியானதால் பதற்றம் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு உத்தரவு!

Monday, September 16, 2013
புதுடெல்லி::பா.ஜ. மூத்த தலைவர் அத்வானிக்கு, ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு கொலை மிரட்டல் விடுத்துள்ளது. இந்தியாவின் எந்த பகுதிக்கு சென்றாலும் குறிவைத்து தாக்குவோம் என்று இன்டர்நெட்டில் ஆடியோ வெளியிட்டுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அத்வானிக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில், கடந்த 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அப்போது முதல் பா.ஜ. மூத்த தலைவர் அத்வானிக்கு, தீவிரவாதிகள் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். அதனால், இசட் பிரிவு பாதுகாப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று ஆக்ராவில் பேரணியில் பங்கேற்க அத்வானி திட்டமிட்டிருந்தார். ஆனால், அத்வானியின் உயிருக்கு தீவிரவாதிகளால் ஆபத்து இருப்பதாக மத்திய உளவு துறை எச்சரித்தது. அதனால், பேரணி ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், ஜெய்ஷ்&இ&முகமது தீவிரவாத அமைப்பு, அத்வானிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ள திடுக்கிடும் தகவல் இன்று வெளியாகி உள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த மவுலானா மசூத் அசார் என்பவர் ஜெய்ஷ்&இ&முகமது என்ற தீவிரவாத அமைப்பை தொடங்கினார். அந்த அமைப்புதான் அத்வானிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளது. இதுதொடர்பான ஆடியோ ஒன்றை இன்டர்நெட்டில் வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவுக்குள் எங்கள் அமைப்பினர் ஊடுருவ முடியாத இடம் ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் என்று அத்வானியிடம் மசூத் அசார் கேள்வி கேட்டுள்ளார். மேலும், அத்வானி இந்தியாவின் எந்த பகுதிக்கு சென்றாலும் கொலை செய்வோம் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

கடந்த 1999ம் ஆண்டு இந்திய விமானத்தை தீவிரவாதிகள் கடத்தி சென்றனர். பின்னர், ஆப்கானிஸ்தானின் காந்தகார் நகரில் விமானத்தை தரையிறக்கி பயணிகளை பிணை கைதிகளாக பிடித்து வைத்துக் கொண்டனர். அப்போது, மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி, திகார் சிறையில் இருந்த மசூத் அசார் உள்பட 3 தீவிரவாதிகளை விடுவித்து, விமான பயணிகளை மீட்டது. இந்த வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக மசூத் அறிவிக்கப்பட்டார்.

அதன்பின், கடந்த 2001ம் ஆண்டு நாடாளுமன்றத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த வழக்கிலும் மசூத் அசார், இந்தியாவால் தேடப்பட்டு வருகிறார். இவர் தற்போது பாகிஸ்தானில் பதுங்கி இருக்கிறார். அவரை ஒப்படைக்க வேண்டும் மத்திய அரசு தொடர்ந்து ஆதாரங்களை அளித்து வருகிறது. எனினும், மசூத் இல்லை என்று பாகிஸ்தான் கூறி வருகிறது.

இந்நிலையில், அத்வானிக்கு மசூத் அசார் கொலை மிரட்டல் விடுத்துள்ளதால், எல்லா மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. அவர் எந்த மாநிலத்துக்கு சென்றாலும் அம்மாநில அரசு பலத்த பாதுகாப்பு வழங்க வேண்டுமென மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment