Friday, September 20, 2013

முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கு: கோர்ட்டில் விஜயகாந்த் ஆஜர் போலீசாருடன் தேமுதிக தொண்டர்கள் மோதல்!

Friday, September 20, 2013
சென்னை::முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் தேமுதிக தலைவர்விஜயகாந்த் இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
கேப்டன் டிவியில் ஒளிபரப்பான செய்தி தொடர்பாக விஜயகாந்த் மீது முதல்வர் ஜெயலலிதா சார்பில் சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு கடந்த டிசம்பர் 13ல் தொடரப்பட்டது. இந்த வழக்கில் நீதிமன்றத்தில் 11 வாய்தாக்களில் விஜயகாந்த் ஆஜர் ஆகவில்லை.  இந்த வழக்கு முதன்மை செஷன்ஸ் நீதிபதி சொக்கலிங்கம் முன்னிலையில் கடந்த 12ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது விஜயகாந்த் ஆஜர் ஆகவில்லை.
அப்போது, அரசு வக்கீல் எம்.என்.ஜெகன், ‘‘இந்த வழக்கில் விஜயகாந்துக்கு ஏற்கனவே பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. செப்டம்பர் 12ல் விஜயகாந்த் ஆஜராக வாய்மொழி உத்தரவிட்டார். ஒட்டு மொத்தமாக இந்த வழக்கில் 13 வாய்தாக்களில் விஜயகாந்த் ஆஜராகவில்லை.

எனவே அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்க வேண்டும் என்று வாதிட்டார். இதைக் கேட்ட நீத¤பதி, வழக்கு விசாரணையை செப்டம்பர் 20ம் தேதிக்கு தள்ளி வைத்தார். இதையடுத்து, இந்த வழக்கு இன்று முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி சொக்கலிங்கம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு வக்கீல் எம்.எல்.ஜெகன் ஆஜரானார். காலை 11.15 மணிக்கு விஜயகாந்த் ஆஜர் ஆனார். விஜயகாந்த் தரப்பில் வக்கீல்கள் பாலாஜி, நமோ நாராயணன், மணிவண்ணன், பெரியசாமி,  உள்ளிட்ட ஏராளமான வக்கீல்கள் ஆஜரானார்கள்.

வழக்கை விசாரித்த நீதிபதி சொக்கலிங்கம்,  விசாரணையை அக்டோபர் 30 ம் தேதிக்கு தள்ளி வைத்தார். கோர்ட்டில் ஆஜராகிவிட்டு வெளியே வந்த விஜயகாந்த், நிருபர்களிடம் பேசும்போது, ‘‘எனது வளர்ச்சியை பிடிக்காமல் என் மீது தமிழக அரசு வேண்டும் என்றே வழக்கு தொடர்ந்துள்ளது. வழக்கு போட வேண்டும் என்பதற்காகவே தொலைக்காட்சியில் வந்த செய்தியின் அடிப்படையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதை சட்டப்படி சந்திப்பேன்’’ என்றார்.

விஜயகாந்த் வருகையை எதிர்பார்த்து தேமுதிக தொண்டர்கள் கோர்ட் வளாகத்தில் குவிந்தனர்.  இதைப்பார்த்த  உதவி கமிஷனர் முரளி, தொண்டர்களை பார்த்து, கோர்ட்டுக்குள் வருவதற்கான அனுமதி பாஸ் உள்ளதா என்று கேட்டார். இதனால் போலீசாருக்கும் தொண்டர்களுக்கும் அவர்களுக்கு ஆதரவாக வந்த வக்கீல்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.

No comments:

Post a Comment