Wednesday, September 25, 2013

சுயாதீனமானதொரு தேர்தல் நடைபெறாதிருந்தால் வடக்கில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு வெற்றி பெற்றிருக்க முடியாது: மீண்டுமொரு பிரிவினைக்கு இங்கு இடமில்லை; விமல் வீரவன்ச!

Wednesday, September 25, 2013
இலங்கை::சுயாதீனமானதொரு தேர்தல் நடைபெறாதிருந்தால் வடக்கில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு வெற்றி பெற்றிருக்க முடியாது. தேர்தல் காலங்களில் நடைபெற்ற சிறு சிறு சம்பவங்களை வைத்து தேர்தலை குறைகூற முடியாது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஒரு போதும் நடைமுறைப்படுத்த விடமாட்டோம். மீண்டுமொரு பிரிவினைக்கு இங்கு இடமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நடைபெற்று முடிந்த மாகாண சபைத் தேர்தலில் ஜனநாயக முறையில் சுயாதீனமாக நடைபெறவில்லை என சிலர் குறிப்பிடுகின்றனர். வடக்கிலும் இந்த நிலையென விமர்சிக்கின்றனர். வடக்கில் சுயாதீனமாக தேர்தல் நடைபெற்றதனால் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றது. மக்கள் தமது சுதந்திரத்தினை அனுபவித்ததன் காரணமாகவே வடக்கில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினர் பெரிய வெற்றியினை பெற்றுள்ளனர்.

ஆனால் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் வெற்றி பெரியதொரு சரித்திரமல்ல.

நீண்ட கால பிரிவினை கொள்கைகளை வடக்கு மக்களின் மனதில் விதைத்ததன் காரணமாகவே வடக்கில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு 30 ஆசனங்களை பெற முடிந்தது.

மேலும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு சொல்வதையெல்லாம் அரசாங்கம் செய்ய வேண்டிய அவசியமில்லை. கூட்டமைப்பின் விஞ்ஞாபனத்தையும் நாம் ஒரு போதும் அனுமதிக்கப் போவதுமில்லை. சம்பந்தன் விக்னேஸ்வரனின் பிரிவினை சூழ்ச்சிகளுக்கு நாம் இடம்கொடுக்கப்போவதுமில்லை.

செத்சிரிபாயவில் வீடமைப்பு அமைச்சின் காரியாலயத்தில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment