Monday, September 09, 2013
சென்னை::அ.தி.மு.க., பொதுச்செயலர் தேர்தல், தள்ளி வைக்கப்பட்டுள்ளது என, முதல்வர்
ஜெயலலிதா அறிவித்துள்ளார்.அவரது அறிக்கை:
அ.தி.மு.க., சட்ட, திட்ட விதிகளின்படி, கட்சி அமைப்புகளின் பொதுத் தேர்தல், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்த வேண்டும். அ.தி.மு.க., உறுப்பினர்கள், தங்களுடைய பதிவை புதுப்பிப்பதற்கு, புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கான பணிகள் துவக்கப்பட்டுள்ளன.ஏராளமானோர் உறுப்பினர் உரிமைச் சீட்டு வேண்டி, அதற்கான விண்ணப்பங்களை, தலைமை அலுவலகத்தில் சேர்ப்பித்துள்ளனர். தற்போது, இவர்களுக்கான உறுப்பினர் உரிமைச் சீட்டுகள், தயார் செய்யும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
அ.தி.மு.க., சட்ட, திட்ட விதிகளின்படி, கட்சியின் பொதுச்செயலர், தமிழகத்தில் உள்ள கிளைகளின் அடிப்படை உறுப்பினர்களாலும், கட்சி அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளா, டில்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களில் அடங்கிய கிளைகளின் உறுப்பினர்களாலும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
தற்போது, உறுப்பினர் உரிமைச் சீட்டுகள் அச்சடிக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருப்பதை கருத்தில் கொண்டு, கட்சி விதிகளின்படி, கட்சி சட்ட, திட்ட விதிகளுக்கு, விதிவிலக்கு அளிக்கும் அதிகாரம், கட்சி பொதுச் செயலருக்கு உண்டு.அந்த அதிகாரத்தின் அடிப்படையில், கட்சி உறுப்பினர் உரிமைச் சீட்டுகள் வழங்கும் பணி நிறைவு பெற்றவுடன், கட்சி பொதுச்செயலர் பொறுப்புக்கான தேர்தல் நடைபெறும். இதைத் தொடர்ந்து, அடுத்த கட்ட அமைப்புத் தேர்தல்கள் நடைபெறும்.இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

No comments:
Post a Comment