Sunday, September 22, 2013

உள்நாட்டில் அரசாங்கத்திற்கு நல்லெண்ணத்தைக் காட்டுவது போல நடிப்பதும், வெளிநாடுகளிலுள்ள புலம்பெயர் சமூகத்திற்கு தாம் அரசாங்கத்திற்கு எதிரானவர்கள் எனக் காட்டுவதுமாக இரட்டை முகத்துடனேயே தமிழ்க் தேசிய கூட்டமைப்பு இன்று செயற்பட்டு வருகின்றது!

 
Sunday, September 22, 2013
இலங்கை::முப்பது வருட காலமாக புலிகளின் ஏகாதிபத்தியத்திற்குள் கட்டுண்டு கிடந்த வடமாகாணத்தை மீட்டெடுத்த பின்னர் அம்மக்கள் தமது பிரதிநிதிகளைத் தாமே தெரிவு செய்து ஜனநாயக ரீதியில் அங்கு ஆட்சி இடம்பெற வேண்டும் என்பதில் அரசாங்கம் மிகவும் உறுதியாக இருந்தமையால்தான் அங்கே பலராலும் எதிர்பார்க்கப்பட்ட மாகாண சபைத் தேர்தல் நேற்றைய தினம் மிகவும் அமைதியான முறையில் நடத்தப்பட்டுள்ளது.

இது அரசாங்கத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். தமிழ்க் தேசிய கூட்டமைப்பினர் வெளிநாடுகளில் செய்துவந்த பொய்ப் பிரசாரங்கள் இதன் மூலமாக இல்லாதொழிக்கப்பட்டுள்ளது. சர்வதேசத்தின் எந்தவொரு அழுத்தத்திற்கும் அடிபணிந்து, தான் தேர்தலை நடத்த முனையவில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பகிரங்கமாகவே தெரிவித்திருந்தார்.

யுத்தம் முடிவிற்குக் கொண்டுவரப்பட்ட கடந்த நான்கு வருடங்களாக வடக்கிலும் கிழக்கிலும் அம்மக்கள் தமது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டிருந்தது. பாரிய அழிவுகளைச் சந்தித்திருந்த அப்பகுதி மக்களது வாழ்விடங்களைப் புனர்நிர்மாணம் செய்து மிதி வெடிகள் மற்றும் கண்ணிவெடிகளை அகற்றி இப்போது அப்பிரதேசங்களை வழமை நிலைக்கு கொண்டு வந்துள்ளது. ஒரு காலத்தில் அரசாங்கக் கட்டமைப்புக்கள் எதுவுமில்லாது துண்டிக்கப்பட்டிருந்த பல பிரதேசங்கள் இன்று பாரிய அபிவிருத்தி கண்டுள்ளன. அத்துடன் யுத்தத்தின்போது கைது செய்யப்பட்ட மற்றும் சரணடைந்த முன்னாள்  புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்டுள்ளனர்.
 
இத்தகைய அத்தியாவசிய நடவடிக்கைகளை மேற்கொண்டமையினாலேயே வடக்கில் தேர்தலை நடத்துவதில் தாமதமானதொரு நிலை ஏற்பட்டிருந்தது. வடக்கின் பெரும்பாலான பிரதேசங்களில் பொதுமக்கள் பலரும் பல வருடங்களான தம்மை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யாமலேயே இருந்து வந்துள்ளனர். அடையாள அட்டைகளைக் கூட அவர்களில் பலர் பெற்றிருக்கவில்லை. அவற்றையும் சீர்செய்த பின்னர் சரியான முறையில் நீதியாகவும், நேர்மையாகவும் நேற்றைய தேர்தலை நடத்தி முடித்துள்ளது.
 
இதுவரை காலமும் வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அதிக ஆதிக்கம் செலுத்தி வந்த போதிலும் நடைபெற்ற மாகாண சபைத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம் மக்கள் அரசாங்கத்தின் ஆளும் கட்சியினதும் அதன் பங்காளிக் கட்சியான ஈழ மக்கள் ஜனநாயக மற்றும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளினதும் பக்கமும் உள்ளனர் என்பதை தெளிவாக அவதானிக்க முடிகின்றது.

இதற்கு அரசாங்கம் கடந்த பல வருடங்களாக அங்கு மேற்கொண்டு வரும் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் அமைந்துள்ளன. அத்துடன் தொழில் வாய்ப்புக்களை உரிய முறையில் வழங்கி வருவதுடன் அரசியல் ரீதியாகவும் தீர்வினைக் காணக் காத்திரமான பங்களிப்பைச் செய்து வருவதுவும் பிரதான காரணங்களாக அமைந்துள்ளன.

இந்நிலையில் தமிழ் மக்கள் இத்தனை துன்பங்களையும் அனுபவித்த பின்னர் இனியும் திருந்தாவிட்டால் இனி அவர்களை இறைவனே காப்பாற்ற வேண்டும். இவ்விடயத்தில் இடம்பெயர்ந்த ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர் சமூகமாக வாழ்ந்து வரும் தமிழ் மக்கள் தம்மை மாற்றிக் கொள்ள முன்வர வேண்டும். அவர்களுக்கு உள்நாட்டில் நடக்கும் விடயங்கள் முழுமையாகத் தெரிய நியாயமில்லை. இருபத்துநான்கு மணிநேரத்தில் இருபது மணி நேரம் வேலை செய்துவிட்டு மிகுதி நான்கு மணி நேரத்தில் கிடைக்கும் கணப்பொழுதில் இணையத் தளச் செய்திகளை அரைகுறையாக வாசித்துவிட்டும் இங்கு இன்னமும் தமிழ் மக்கள் கஷ்டத்துடன் வாழ்வதாகவே அங்கிருந்து ஒப்பாரி வைத்து வருகின்றனர்.

உள்நாட்டு விடயங்களைச் சரிவர அறிந்துகொண்டு அதற்கேற்ப தம்மை மாற்றிக் கொள்ளவோ இவர்கள் இன்னமும் முயற்சிக்காமை கவலை தரும் விடயமே. அதற்குக் காரணம் இன்னமும் இவர்கள் தாம் குடிபெயர்ந்து பதினைந்து இருபது வருடங்களுக்கு முன்னரான நிலையிலேயே தமிழர் பிரதேசங்களின் நிலை இருப்பதாக எண்ணி வருகின்றனர். எவ்வளவுதான் எடுத்துக் கூறினாலும் இவ்விரு விடயங்களிலிருந்தும் இவர்களைப் பிரித்தெடுப்பது சிரமமான காரியமாகவே உள்ளது.

இவர்களது மனநிலையை வெளிநாடுகளிலிருக்கும்  புலிகளின் ஆதரவாளர்களும் அதே சம நிலையில் பேணி வருகின்றார்கள் என்பதுவும் மற்றுமொரு கசப்பான உண்மையாகும். இலங்கையில் தமிழர் பிரதேசங்களில் அமைதி நிலவுகின்றது, அங்கு தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ்கின்றார்கள் என்ற உண்மையை புலம்பெயர் நாடுகளில் கசியவிட்டால் அந்நாடுகள் அங்கு பொய்யாகத் தஞ்சம் கோரி வாழும் பலரை திருப்பி அனுப்பிவிடுவர் என்பது இவர்களது மற்றுமொரு காரணமாகும்.

ஐரோப்பிய நாடுகளில் இந்நிலை இனியும் தொடருமாயின் உள்நாட்டில் வாழ்ந்து வருகின்ற தமிழ் மக்கள் மீண்டும் தமது அமைதியை இழக்க நேரிடும். வெளிநாடுகளிலிருந்து தமிழருக்காகக் குரல் கொடுப்போருடன் இங்குள்ள மக்களுக்கும் தொடர்பு இருப்பதாக பாதுகாப்புத் தரப்பு சந்தேகம் கொள்ள நேரிடும். ஏற்கனவே சரணடைந்து புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைந்து வாழும் முன்னாள் புலிகள் மீதும் வீணான சந்தேகங்கள் எழுவதற்கும் இடமுண்டு.

இன்று புலிகளே இல்லை என்றாகிவிட்டது. ஆயுதப் போராட்டத்திற்கு இனி இடமே இல்லை எனும் நிலையில் படையினர் தமது நிலைகளைப் பலப்படுத்தி விட்டனர். இந்நிலையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு கடந்த நான்கு வருடங்களில் அரசாங்கம் தேவையான சகல உதவிகளையும் செய்து வருகின்றது. இது உள்நாட்டில் வாழ்ந்து வரும் தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும்.

ஒருசில குறைபாடுகள் காணப்படினும் அரசாங்கம் தனது கடமையைச் சரியாகவே செய்து வருகின்றது. முன்னொரு காலத்தில் தூரநோக்கிய சிந்தனையுடைய கல்விகற்ற அரசியல்வாதிகள் தமிழ்க் கட்சிகளில் தமது மக்களுக்குச் சேவையாற்றவென்றே இருந்துள்ளனர். ஆனால் இன்று பாராளுமன்றத்தில் தமிழிலேயே பேசத் தடுமாறும், வெளிநாட்டுப் பிரதிநிதிகளுடன் மொழிபெயர்ப்பாளரை நம்பி தமிழ்க் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இணையத்தளங்களுக்கு வெளியிட்டுவரும் கருத்துக்களும், காணொளிக் காட்சி பேட்டிகளும் அரசாங்கத்தை வசை பாடுவதாகவும், அரசின் நல்ல அபிவிருத்திப் பணிகளை விமர்சிப்பதுவுமாகவே உள்ளது. அதிலும் வேடிக்கையான விடயம் யாதெனில் இவர்களில் சிலர் தமது கட்சியின் நிலைப்பாடு என்ன என்று தெரியாமலே பல அறிக்கைகளை விட்டு வருவதுதான். உண்மையில் தமிழ்க் தேசிய கூட்டமைப்பின் உண்மையான நிலைப்பாடு என்ன என்பதை அறியாத தமிழ் மக்கள் குழம்பிப் போயுள்ளனர்.

புலத்தில் அதாவது உள்நாட்டில் அரசாங்கத்திற்கு நல்லெண்ணத்தைக் காட்டுவது போல நடிப்பதும், வெளிநாடுகளிலுள்ள புலம்பெயர் சமூகத்திற்கு தாம் அரசாங்கத்திற்கு எதிரானவர்கள் எனக் காட்டுவதுமாக இரட்டை முகத்துடனேயே கூட்டமைப்பு இன்று செயற்பட்டு வருகின்றதோ என்று எண்ணத்தோன்றுகிறது.

இவ்வாறு இரட்டை வேடத்தைப் போட்டுக் கொண்டு எவ்வாறு இவர்களால் அரசாங்கத்திடமிருந்து கைமாறை எதிர்பார்க்க முடியும். ஒன்று இவர்கள் புலிகள் இருந்தபோது செய்த வேலையை அதாவது அரசாங்கத்தை முடிந்தளவு எதிர்த்து விமர்சிப்பது என்ற கொள்கையிலிருந்து கொண்டு எந்தவிதமான அரசின் சலுகைகளையும் தமிழ் மக்களைச் சென்றடையவிடாது தடுப்பதில் குறியாக இருக்கவேண்டும். அல்லது வெளிப்படையாகவே அரசிற்கு ஆதரவை வழங்கி தமிழ் மக்களுக்கு அரசின் அபிவிருத்திப் பணிகள் சென்றடைய உதவி புரிய வேண்டும்.
 
கடந்த காலங்களில் சில தமிழ்த் தலைவர்கள் தமது மக்களின் நலன் கருதி அரசாங்கத்துடன் இணைந்து துணிந்து செயற்பட்டதுபோன்று ஒவ்வொருவராக அல்லது கூட்டாக களத்தில் இறங்க வேண்டும்.

No comments:

Post a Comment