Wednesday, September 25, 2013

புத்தளத்திலுள்ள பாடசாலையில் இருந்து ஒரு தொகை வாக்குச்சீட்டுக்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தமது உத்தியோகத்தர்களின் கவனயீனத்தினால் ஏற்பட்டது: தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய!

Wednesday, September 25, 2013
இலங்கை::புத்தளத்திலுள்ள பாடசாலையில் இருந்து ஒரு தொகை வாக்குச்சீட்டுக்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தமது உத்தியோகத்தர்களின் கவனயீனத்தினால் ஏற்பட்டதென தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

இன்று முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

வழங்கப்பட்ட உத்தரவுகளை தமது உத்தியோகத்தர்கள் பின்பற்றவில்லை என்பது தெரியவந்தால், அந்த உத்தியோகத்தர்கள் கட்டாய விடுமுறையில் அனுப்புவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் அரச நிர்வாக அமைச்சின் செயலாளரின் கீழ், விசாரணைகள் இடம்பெறவுள்ளதாகவும் மஹிந்த தேசப்பிரிய மேலும் சுட்டிக்காட்டினார்...

புத்தளம், புனித அன்ரூஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்கெண்ணும் நிலையத்திலிருந்து, ஒருதொகை புள்ளடியிடப்பட்ட வாக்குச் சீட்டுகள் கண்டெடுக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்துடன் அதிகாரிகளுக்குத் தொடர்புள்ளமை தெரியவருகின்ற பட்சத்தில், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வாக்குச்சீட்டுக்கள் எண்ணப்பட்டு, விருப்பு வாக்குகள் கணக்கிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

புனித அன்ரூஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்கெண்ணும் நிலையத்திலிருந்து, குறித்த வாக்குச் சீட்டுகள் மாவட்ட செயலகத்துக்கு  கொண்டுசெல்லப்படவில்லை என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவிக்கின்றார்.

கண்டெடுக்கப்பட்ட அனைத்து வாக்குச் சீட்டுக்களும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மஹிந்த தேஷப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இதனால் பாதிக்கப்பட்டவர்களால் வேண்டுகோள் விடுக்கப்படும் பட்சத்தில் இந்த வாக்குச் சீட்டுக்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு தாம் பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment