Thursday, September 19, 2013

முஸ்லிம் பகுதிகளில் வசிக்கும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் தீவிரவாதிகளுக்கு அல் கய்தா உத்தரவு!!

Thursday, September 19, 2013
லண்டன்::முஸ்லிம் பகுதிகளில் வசிக்கும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்று அல் கய்தா  தீவிரவாதிகளுக்கு அதன் தலைவர் அய்மன் அல் ஜவஹிரி உத்தரவிட்டுள்ளார். கடந்த 2001 செப்டம்பர் 11ம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில்  இருந்த இரட்டை கோபுரங்களை, அல் கய்தா தீவிரவாதிகள் தகர்த்தனர். அதன்பின், பாகிஸ்தானில் பதுங்கி இருந்த அல் கய்தா தலைவர் ஒசாமா  பின்லாடனை, கடந்த 2011ம் ஆண்டு அமெரிக்க படைகள் சுட்டுக் கொன்றன. இதையடுத்து, அய்மன் அல் ஜவஹிரி தலைவரானார். அமெரிக்கர்களுக்கு  எதிராக அல் கய்தா தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதேநேரத்தில் ஷியா பிரிவு முஸ்லிம்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள்,  சீக்கியர்கள் மீதும் தாக்குதல் நடத்துகின்றனர்.

இந்நிலையில், அல் கய்தா தீவிரவாதிகளின் நடத்தை குறித்தும், கட்டுப்பாடுகள் குறித்தும் அதன் தலைவர் அய்மன் அல் ஜவஹிரி, கடந்த 13ம் தேதி  டாக்குமென்டரி ஒன்றை திடீரென வெளியிட்டுள்ளார். அதில் ஜவஹிரி கூறியிருப்பதாவது:

அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு எதிராகதான் ஜிகாத் நடத்த வேண்டும். அமெரிக்காவை வலுவிழக்க செய்ய வேண்டும் என்பதுதான் நம்  நோக்கம். எனவே, சன்னி பிரிவு அல்லாத மற்ற முஸ்லிம்கள் மீதும், இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் மீதும் தாக்குதல் நடத்த வேண்டாம்.  குறிப்பாக மற்ற பிரிவு முஸ்லிம்களின் மசூதிகளில் தாக்குதல் நடத்த வேண்டாம். மேலும், குழந்தைகள், பெண்கள் விஷயத்தில் கவனமாக இருங்கள்.  அவர்களுடைய உயிர்களுக்கு மதிப்பு கொடுங்கள்.

மார்க்கெட், மக்கள் கூடும் இடங்களில் தாக்குதல் நடத்த வேண்டாம். அங்கெல்லாம் முஸ்லிம்களுடன் மற்ற இன, மத மக்களும் இருப்பார்கள். எனவே,  அந்த பகுதிகளில் தாக்குதல் நடத்த வேண்டாம். ஷியா பிரிவு முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தினால், அவர்கள் அமெரிக்காவுக்கு எதிரான  போராட்டத்தில் பங்கேற்க மாட்டார்கள். இதை தவிர்க்க மற்ற பிரிவு முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம்.இவ்வாறு ஜவஹரி கூறியுள்ளார்.  எகிப்தை சேர்ந்த ஜவஹிரி தற்போது பாகிஸ்தானில் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment