Monday, September 23, 2013

ஐக்கிய நாடுகள் சபையின் 68வது பொதுச்சபை அமர்வில் பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஐந்து நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற் கொண்டு நியூயோர்க் நகருக்குப் பயணமானார்!

Monday, September 23, 2013
இலங்கை::ஐக்கிய நாடுகள் சபையின் 68வது பொதுச்சபை அமர்வில் பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தனது பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ சகிதம் ஐந்து நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற் கொண்டு நேற்று அதிகாலையில் ஐக்கிய அமெரிக்காவின் நியூயோர்க் நகருக்குப் பயணமானார்.
 
நியூயோர்க் நகரில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் தற்போது நடைபெற்றுவரும் அதன் 68வது பொதுச் சபை அமர்வில் பங்குபற்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், நாளை 24ம் திகதி செவ்வாய்க்கிழமை சொற்பொழிவாற்றவுள்ளார்.
 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் 2005 ஆம் ஆண்டில் ஜனாதிபதியாகப் பதவியேற்றதைத் தொடர்ந்து அவர் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அமர்வில் 6வது தடவையாக சொற்பொழிவாற்றும் சந்தர்ப்பம் இது. முதலாவதாக 2006 ஆம் ஆண்டில் அவர் ஐ.நா. சபையின் பொது அமர்வில் உரையாற்றினார்.
பயங்கரவாதத்தைத் தோல்வியுறச் செய்து மூன்று வருடங்கள் பூர்த்தி அடையாத நிலையில் அவர் ஐ.நா. சபை பொதுச் சபை அமர்வில் உரையாற்றும் போது "நவீன உலகில் நிலையான தன்மைக்கும், முன்னேற்றத்திற்கும் பெரும் தடையாக, சவாலாக இருப்பது பயங்கரவாதமே" எனச் சுட்டிக்காட்டினார்.
 
பிரச்சினைகள், முரண்பாடுகள் போன்றவற்றைத் தீர்த்துக்கொள்வதற்கு இருக்கும் பலன் தரக்கூடிய ஒரே வழி பேச்சுவார்த்தையும், ஏகமனதான தன்மையுமே. பலம் மிக்க தேசங்களின் சக்தி கடமைக்கும், நியாயத்திற்கும் மாற்aடில்லை எனவும் ஜனாதிபதி அவர்கள் அன்று குறிப்பிட்டிருந்தார்.
ஜனாதிபதி அவர்கள் இவ்விஜயத்தின் போது ஐ.நா. செயலாளர் நாயகம் பாங்கீமூன், பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஸ் ஷர்மா மற்றும் ஆசிய, ஆபிரிக்கக் கண்டங்களைச் சேர்ந்த நாடுகளின் தலைவர்களையும் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.
 
நியூயோர்க் நகரில் தங்கியிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், நாட்டின் அபிவிருத்தி தொடர்பாக உயர் மட்ட அரசியல் கலந்துரையாடல்களிலும் பங்குபற்றவுள்ளார். ஆபிரிக்க நாடுகளின் தலைவர்களுக்காக நியூயோர்க்கில் இரவு விருந்துபசாரமொன்றையும் ஜனாதிபதி அவர்கள் ஏற்பாடு செய்துள்ளார்.
 
வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர், ஜீ.எல். பீரிஸ், நீர்ப்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, இளைஞர் விவகார, திறன் விருத்தி அமைச்சர் டளஸ் அழகப் பெரும, வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தன, கண்டி மாவட்ட எம்.பி. லொஹான் ரத்வத்த, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் இவ்விஜயத்தில் ஜனாதிபதியுடன் பயணமாகியுள்ளனர்.

No comments:

Post a Comment