Sunday, September 22, 2013
இலங்கை::வடக்கு, வடமேல், மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல் வாக்கெடுப்பு நேற்று (21) அமைதியான முறையில் நிறைவடைந்துள்ளது. நேற்றைய தேர்தலில் 60% வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளது.
மூன்று மாகாணங்களிலும் மக்கள் அக்கறையுடனும் சுறுசுறுப்புடனும் வாக்களித்துள்ளனர். காலை ஏழு மணி முதல் மாலை நான்கு மணி வரை நடைபெற்ற வாக்குப்பதிவு முதலில் சற்று மந்த மாகக் காணப்பட்ட போதிலும் நண்பகல் வேளை சுறுசுறுப்பாகக் காணப்பட்டதாக எமது நிருபர்கள் தெரிவித்தனர்.
வட மாகாண சபைத் தேர் தலில் கடந்த 25 ஆண்டுகளுக்குப் பின்னர் மக்கள் மாகாண சபைத் தேர்தலில் அக்கறையுடன் வாக்களித்ததைக் காணக்கூடியதாகவிருந்தது.
நேற்றைய வாக்கெடுப்பின் போது கட்சி ஆதரவாளர்களுக்கிடையே ஏற்பட்ட சிறு சிறு பிணக்கு களைத்தவிர பாரிய அசம் பாவிதங்கள் எதுவும் இடம் பெறவில்லையெனத் தெரி விக்கப்பட்டது. தேர்தல் நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் பணியில் வெளிநாட்டுப் பிரதிநிதிகளும் உள்ளூர் கண்காணிப்பாளர்களும் ஈடுபட்டிருந்தனர். நேற்று மாலை வரை பாரிய அசம்பாவிதங்கள் தொடர்பாக எந்த முறைப்பாடும் கிடைக்கவில்லையென தேர்தல் செயலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனினும், கண்டியிலும் யாழ். வரணியிலும் சிறு சம்பவங்கள் இடம்பெற்றதாகத் தகவல்கள் தெரிவித்தன. மன்னாரில் தேர்தல் விதிகளை மீறிய இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
மூன்று மாகாணங்களிலும் 10 மாவட்டங்களில் நடத்தப்பட்ட தேர்தலில் 142 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 43,58,263 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.
அரசியல் கட்சிகளிலும் சுயேச்சைக் குழுக்க ளிலுமாக 3785 வேட்பாளர்கள் களமிறங்கிய இந்தத் தேர்தல் வாக்களிப்புக்கென 3612 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. 40 ஆயிரம் அதிகாரிகள் கடமையாற்றுவதுடன் 24,500 பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் அமர்த்தப்பட்டிருந்தனர். வட பகுதியில் பாதுகாப்புக் கடமைகளில் இராணுவப் பிரசன்னம் இல்லாமல் பொலிஸாரே கட மையில் ஈடுபட்டிருந்ததாக எமது நிருபர்கள் தெரிவித்தனர்.
வாக்கு எண்ணும் பணிகள் நேற்று இரவு 8 மணிக்கு ஆரம்பமாகின. இன்று நண்பகலுக்கு முன்னர் அனைத்து முடிவுகளும் வெளியிடப்படுமென தேர்தல் செயலகம் தெரிவித்தது.
யாழ். மாவட்டத்தில் மிகவும் அமைதியான முறையில் வாக்களிப்பு இடம்பெற்றது. கடந்த காலத் தேர்தல்களை விட இம்முறை இடம்பெற்றிருந்த மாகாண சபை தேர்த லில் மக்கள் அதிகளவு ஆர்வம் காட்டாத போதும் வாக்களிப்பு சுமாராகவே இருந் தது. வாக்களிப்பு நிலையங்களில் கண் காணிப்பு நடவடிக்கைகளும் இடம்பெற்றன. பொலிஸார் பாதுகாப்பை பலப்படுத்தி யிருந்தனர். தீவகப் பகுதிகளிலும் மக்கள் வாக்களிப்பில் ஆர்வம் காட்டினர்.
வடமேல் மாகாண சபையின் குருநாகல் மாவட்டத்துக்கான தேர்தல்கள் நேற்று மிக அமைதியாக இடம்பெற்றன. குருநாகல் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்கள் மழை பெய்த போதிலும் நேற்று வெயிலுடன் கூடிய காலநிலை தோன்றியதால் மக்கள் வாக்குச் சாவடிகளுக்கு சென்று தமது வாக்குகளை பதிவு செய்யக்கூடியதாக இருந்தது.
நேற்றுக் காலை 10.00 மணி வரை மந்தமான வாக்களிப்புக்களே காணப்பட்டன. எனினும் நண்பகல் வேளை தொடக்கம் வாக்களிப்பு நிலையங்களில் நீண்ட கியூ வரிசை காணப்பட்டதுடன் மக்கள் சுறுசுறுப்பாக வாக்களிப்பில் கலந்து கொண்டதைக் காணக்கூடியதாக இருந்தது.
குருநாகல் மாவட்டத்தில் 5200 பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டி ருந்தனர். நடமாடும் பொலிஸ் சேவைகளும் இடம்பெற்றன. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அமைதியான வாக்களிப்புக்கள் இடம்பெற்றன. குருநாகல் மாவட்டத்தின் எப்பகுதியிலும் எவ்வித அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை எனவும் மக்களின் வாக்களிப்பு நேற்று நண்பகலில் 45 வீதமாக காணப்பட்டதாக குருநாகல் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகமும் மாவட்ட செயலாளருமான எச்.எம்.பி. ஹிட்டி சேகர தெரிவித்தார்.
இதேவேளை புத்தளத்தில் நேற்று காலை வாக்களிப்பு மந்த கதியாக இருந்த போதும் நண்பகலுக்குப் பின்னர் சுறுசுறுப்பாக மாறியது. அமைதியான முறையில் வாக்களிப்பு இருந்தது. மக்கள் வாக்களித்த பின்னர் பொது இடங்களில் கூடி நிற்காமல் தத்தம் வீடுகளுக்குச் சென்றனர்.
மத்திய மாகாணத்தில்
மத்திய மாகாண சபைத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் வாக்களிப்பு நடவடிக்கைகள் மிக அமைதியாக நடைபெற்றன.
நேற்று நண்பகல் வரை வாக்குப் பதிவுகள் 42 வீதம் பதிவாகியிருந்ததாக கண்டி மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி காமினி செனவிரட்ன தெரிவித்தார்.
மத்திய மாகாண சபைக்கு தெரிவாகும் 58 உறுப்பினர்களில் 29 உறுப்பினர்கள் கண்டி மாவட்டத்திலிருந்தே தெரிவு செய்யப்ப டுவார்கள். இதன் பொருட்டு கண்டி மாவடத்தில் 13 தேர்தல் தொகுதிகளிலும் 10,25,315 வாக்காளர்கள் வாக்களிக்க பதிவாகியிருந்தனர்.இவர்கள் வாக்களிப் பதற்காக 825 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இவ்வாக்குச் சாவடிகளில் காலை 7.00 மணி முதல் அமைதியாகவே நடைபெற்று வந்தது.இவ் வாக்குச் சாவடிகளில் நண்பகல் வரை 40 சதவீதம் வாக்குகள் பதிவாகி யிருந்ததாக தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி காமினி செனவிரட்ன தெரிவித்தார்.
பொலிஸார் அதிக பாதுகாப்பு நடவடிக்கைகளையும் ரோந்து சேவைகளையும் மேற்கொண்டிருந்தனர்.
நேற்றுக் காலை முதல் கண்டி மாவட்டத் தில் சீரான காலநிலை காணப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியுடன் வாக்களிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.
இதேவேளை மாத்தளை மாவட்டத்தில் சீகிரிய பிரதேசத்தில் வாக்குச் சாவடி ஒன்றிற்கு அருகில் இரு கோஷ்டிகளுக் கிடையே ஏற்பட்ட கை கலப்பில் இருவர் பலத்த காயங்களுக்குள்ளாகி தம்புள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட் டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மாத்தளை மாவட்டத்தில் அமைதியான தேர்தல் இடம்பெற்றதாக மாத்தளை மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி ஹெலன் ஏ. மீகஸ்முல்ல தெரிவிக்கின்றார்.
பி.ப. 1.00 மணி வரை மாத்தளை மாவட்டத்தில் 60% வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது. வாக்களிப்பில் மக்கள் மிகவும் விருப்பத்துடன் கலந்து கொள்வதை அவதானிக்க முடிந்தது. மாத்தளை மாவட்ட தோட்டப் பகுதிகளிலும் முஸ் லிம் மக்கள் வாழும் பகுதிகளிலும் வழ மைக்கு மாறாக வாக்காளர்கள் வாக்களிப்பு நிலையங்களில் நீண்ட கியூ வரிசைகளில் நிற்பதையும் காண முடிந்தது.
மாத்தளை மாவட்டத்தில் சில வாக்களிப்பு நிலையங்களில் அசம்பாவித சம்பவங்கள் இடம்பெறலாம் என்ற சந்தேகம் ஏற்பட்ட தால் அப்பகுதிகளில் கூட்டமாக பாதை ஓரங்களில் இருந்தவர்களை பொலிஸாரைக் கொண்டு அந்த இடங்களை விட்டும் அகற்றப்பட்டதாக தெரிவத்தாட்சி அதிகாரி ஹெலன் மீகஸ்முல்ல தெரிவிக்கின்றார்.
நேற்றைய தினம் காலை வேளை வாக்களிப்பு சுறு சுறுப்பாக இடம்பெற்ற போதும் பி.ப. 2.00 மணியாகும் போது மந்தமான நிலையே காணப்பட்டதையும் அவதானிக்க முடிந்தது.
கண்டி மாவட்டத்திலுள்ள நாவலப்பிட்டி, புசல்லாவ, கலகா, கம்பளை, கண்டி போன்ற பிரதேசங்களில் பெருந் தோட்டங்களிலுள்ள மக்கள் தேர்தலில் சுறுசுறுப்பாக வாக்களிப்பதை காண முடிந்தது. இப்பகுதிகளில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் இதுவரை நடைபெற வில்லை. அமைதியான சூழ்நிலை காணப்படுகிறது. காலநிலையும் நன்றாக இருந்தது. பொது மக்களின் பாதுகாப்பு கருதி பொலிஸார் ரோந்து சேவையில் ஈடுபடுவதை காண முடிந்தது.


No comments:
Post a Comment