Tuesday, September 10, 2013

ஆஸ்திரேலியாவுக்கு அனுப்புவதாக கூறி இலங்கை அகதிகளிடம் ரூ.20 லட்சம் மோசடி: 7 பேர் கைது!

Tuesday, September 10, 2013
கோவை::இலங்கை அகதிகளிடம் ஆஸ்திரேலியாவில் வேலை வாங்கி தருவதாக கூறி 20 லட்ச ரூபாய் மோசடி செய்த 7 பேரை கியூ பிராஞ்ச் போலீசார் கைது செய்தனர்.
 ஈரோடு மாவட்டம் பவானிசாகர் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த விவேகானந்தன் (34), விக்னேஸ்வரன்(28), பிரபாகரன்(39), ஸ்ரீதரன்(29). இவர்கள் நல்ல வேலை தேடி கொண்டிருந்தனர். அப்போது சிலர், ஆஸ்திரேலியா நாட்டில் 1 லட்ச ரூபாய் சம்பளத்தில் வேலை இருப்பதாக இவர்களிடம் கூறினர். கேரள மாநிலம் கொச்சியில் இருந்து படகு மூலமாக ஆஸ்திரேலியா செல்ல முடியும். இதற்கு 1 லட்ச ரூபாய் தர வேண்டும் என அவர்கள் கூறியுள்ளனர்.

இதை நம்பி விவேகானந்தன், 1 லட்ச ரூபாயும், விக்னேஸ்வரன் 60 ஆயிரம் ரூபாயும், பிரபாகரன் 1 லட்ச ரூபாயும், ஸ்ரீதரன் 45 ஆயிரம் ரூபாயும் கொடுத்துள்ளனர். ஆனால் அவர்கள் விவேகானந்தன் உட்பட 4 பேரை ஆஸ்திரேலியா நாட்டுக்கு அனுப்பவில்லை. இந்நிலையில் அந்த நபர்கள், 4 பேரையும் கடந்த மாதம் கோவைக்கு வரவழைத்தனர். கோவை காந்திபுரத்தில் இருந்து ஒரு வேனில் மேட்டுப்பாளையம் அழைத்து சென்றனர். பின்னர் அங்கிருந்து பவானிசாகர், குன்னூர், ஊட்டி ஆகிய பகுதிகளுக்கு அழைத்து சென்றுள்ளனர். இதன் பின்னர் மைசூர் அழைத்து சென்ற அந்த நபர்கள் ‘கொச்சியில் கடலில் சீற்றம் அதிகமாக இருக்கிறது, அடிக்கடி மழை பெய்கிறது.

இப்போது பயணம் வேண்டாம், இன்னும் 10 நாட்கள் கழித்து நாங்கள் உங்களை ஆஸ்திரேலியா அழைத்து செல்கிறோம்‘ என கூறியுள்ளனர். இவர்களின் பேச்சில் சந்தேகமடைந்த விவேகானந்தன் கோவை கியூ பிராஞ்ச் போலீசில் புகார் கொடுத்தார்.

இது தொடர்பாக கியூ பிராஞ்ச் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் ராமேஸ்வரத்தில் வசிக்கும் இலங்கை தமிழர் சிவசங்கர் (34), சென்னை வளசரவாக்கத்தில் வசிக்கும் இலங்கை தமிழர் ஸ்ரீஜெயன் (எ) ஜெகன்(36) ஆகியோர் பணத்தை வாங்கி ஏமாற்றியது தெரியவந்தது. இவர்கள் 2 பேரையும்  மேட்டுப்பாளையத்தில் கியூ பிராஞ்ச் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

பவானிசாகர் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த ஈஸ்வரன்(32), மேட்டுப்பாளையம் வேடர் காலனி அகதிகள் முகாமை சேர்ந்த கண்ணா (எ) பாலச்சந்திரன்(30), பவானிசாகர் அகதிகள் முகாமை சேர்ந்த பட்டதாரி வாலிபர் ரமேஷ்(23) ஆகியோரையும் மேட்டுப்பாளையம் வேடர் காலனி அகதிகள் முகாமை சேர்ந்த சுபாகரன்(28), மண்டபம் அகதிகள் முகாமை சேர்ந்த சதீஸ் (30) ஆகியோரையும் கியூ பிராஞ்ச் போலீசார் கைது செய்தனர்.

இதை தவிர தப்பி ஓடிய படகு மெக்கானிக் வீரமணி(28) எர்ணாகுளம் சுரேஷ்(30) ஆகிய 2 பேரையும் கியூ பிராஞ்ச் போலீசார் தேடி வருகின்றனர். மேலும் கொச்சியில் இருந்து இவர்கள் ஆஸ்திரேலிய நாட்டுக்கு தப்பி செல்வதற்காக பயன்படுத்தப்பட்ட ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள ஒரு பைபர் படகு மற்றும் ரூ.12 லட்சம் மதிப்புள்ள விசைப்படகு ஆகியவற்றை பறிமுதல் செய்வதற்காக கியூ பிராஞ்ச் போலீசார் நேற்று கொச்சி சென்றனர்.

கைதான 7 பேரிடமும் கியூ பிராஞ்ச் போலீசார் நடத்திய விசாரணையில் திருச்சி வாழவந்தான் கோட்டைல கும்மிடிபூண்டி, புழல், புதுக்கோட்டை பகுதியில் மேலும் 12 பேரிடம் ஆஸ்திரேலியா அனுப்புவதாக கூறி 20 லட்ச ரூபாய் வரை மோசடி செய்திருப்பதாக தெரிகிறது. கைது செய்யப்பட்ட வர்களை கோவை ஜே.எம். எண் 7 கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோவை சிறையில் போலீசார் அடைத்தனர்.

No comments:

Post a Comment