Saturday, August 31, 2013

நாட்டின் தேசிய பாதுகாப்பு சம்பந்தமான விடயங்கள் தொடர்பாக நவநீதம்பிள்ளை விடுத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது!

Saturday, August 31, 2013
இலங்கை::நாட்டின் தேசிய பாதுகாப்பு சம்பந்தமான விடயங்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை விடுத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
 
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குதல்,  வடக்கில் இராணுவத்தை திரும்பப் பெறுதல்,   800 அரசியல் கைதிகளை விடுதலை செய்தல்,  காவற்துறையை நீதியமைச்சின் கீழ் கொண்டு வருதல் ஆகிய கோரிக்கைகளை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
 
பல அரசசார்பற்ற நிறுவனங்களின்  தேவைகளுக்கு அமைய அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது என திவயின குறிப்பிட்டுள்ளது.
 
இந்த நிலையில் ஒரு வாரம் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை சென்றிருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இன்று தனது விஜயத்தை முடித்து கொண்டு திரும்பிச் செல்ல உள்ளார். 
 
வெளிநாட்டு நிதியுதவிகளில் இயங்கும் அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு நவநீதம்பிள்ளை தனது சந்திப்புகளின் போது முன்னுரிமை வழங்கியதாக  தகவல்கள்!
 
முன்னாள்  ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர்,  முன்னாள் காவற்துறை பரிசோதகர் ஜெயரத்தினத்தின் மனைவி சரளா ஆகியோர், யாழ்ப்பாணத்தில் நவநீதம்பிள்ளை சந்திக்க சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.
 
மன்னாரில் காணாமல் போனவர்களின் விடயங்கள் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள  மதகுரு ஜெபமாலை தலைமையிலான 15 பேர் அடங்கிய குழுவினர் மற்றும் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியற்துறை பொறுப்பாளர் எழிலனின் மனைவி ஆனந்தி ஆகியோருக்கு மாத்திரமே அவரை சந்திக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. 
 
யாழ்ப்பாணத்தில் உள்ள ஐ.நா அலுவலத்தில் பணியாற்றும் பெண் அதிகாரி ஒருவரே இந்த அனுமதியை வழங்கியிருந்தார் எனவும் இவர்களுடன் நவநீதம்பிள்ளை கதவுகளை மூடிவிட்டு ரகசியமான முறையில் பேச்சுக்களை நடத்தியதாகவும் திவயின தெரிவித்துள்ளது.
 
வடக்கு, கிழக்கு சிங்கள அமைப்பு மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா ஆகியோரும் பிள்ளையை சந்திக்க சந்தர்ப்பம் கேட்டிருந்தனர் எனினும் அவர்களுக்கும் அந்த அனுமதி வழங்கப்படவில்லை. 
 
வெளிநாட்டு நிதியுதவிகளில் இயங்கும் அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு நவநீதம்பிள்ளை தனது சந்திப்புகளின் போது முன்னுரிமை வழங்கியதாக அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிப்பதாக திவயின கூறியுள்ளது. 

No comments:

Post a Comment