Monday, August 19, 2013
இலங்கை::கடந்தகால சம்பவங்கள் குறித்து விசாரணைகளை நடத்துவதற்கு ஜனாதிபதி ஆணைக்குழுக்களை நியமிக்கும்போது அவற்றை கடுமையாக விமர்சிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஆணைக்குழுக்கள் பரிந்துரைகளை முன்வைத்ததும் அவற்றை அமுல்படுத்துமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் நியமனத்தை ஆரம்பத்தில் கடுமையாக விமர்சித்த கூட்டமைப்பினர் பின்னர் அதன் பரிந்துரைகளை நிறைவேற்றுமாறு வலியுறுத்தினர் என்று ஆளும் கட்சியின் பிரதம கொரடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
அந்தவகையில் தற்போது காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவை கூட்டமைப்பினர் விமர்சிப்பதும் நகைச்சுவையாகவே உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளமை ஏமாற்று நாடகம் என்றும் இலங்கை வரும் நவநீதம் பிள்ளையிடம் மனித உரிமை மீறல்கள் குறித்த சர்வதேச விசாரணை கோரப்படும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளமை தொடர்பில் விபரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அமைச்சர் தினேஷ் குணவர்த்தன இவ்விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில்:-
சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கு ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டுவிட்டதும் அவற்றை விமர்சிக்கும் தமிழ்க் கூட்டமைப்பு பின்னர் அந்த ஆணைக்குழுக்கள் முன்வைக்கும் பரிந்துரைகளை நிறைவேற்றுமாறு கோருவது வழக்கமாகிவிட்டது.
குறிப்பாக வடக்கு கிழக்கு விவகாரங்கள் குறித்து ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஆணைககுழுக்களை கூட்டமைப்பினர் விமர்சித்தே வந்தனர். கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழு நியமிக்கப்பட்டதும் அதனை தமிழ்க் கூட்டமைப்பினர் கடுமையாக விமர்சித்தனர்.
பின்னர் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகளை வெளியிட்டதும் அவற்றை நிறைவேற்றுமாறு கூட்டமைப்பினர் வலியுறுத்த ஆரம்பித்தனர். அந்த வகையிலேயே தற்போது ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவையும் விமர்சிக்கின்றனர். இவர்களின் செயற்பாடுகள் வேடிக்கையாகவே உள்ளன.
எவ்வாறெனினும் கூட்டமைப்பினரின் செயற்பாடுகளை பார்க்கும்போது அவர்கள் சில நோக்கங்களுடன் செயற்படுகின்றமை தெளிவாகின்றது. அதாவது வடக்கில் இடம்பெறும் அபிவிருத்திகளை தடுத்து அங்குள்ள அமைதியை கெடுத்து விடுவதன் ஊடாக அரசாங்கத்தின் பக்கம் இருக்கும் மக்களை தம் பக்கம் வளைப்பதற்கு முயற்சிக்கின்றனர்.
அடுத்ததாக எப்போதும் வெளிநாடுகளுக்கு முறைப்பாடுகளை செய்வதனையே நோக்கமாகக்கொண்டுள்ளனர். மேலும் வெளிநாடுகளில் செயற்படுகின்ற அரச சார்பற்ற நிறுவனங்களின் தேவைகளை நிறைவேற்றுவதையும் நோக்கமாகக்கொண்டுள்ளனர்.
இந்தத் தரப்பினர் இலங்கை மீது நம்பிக்கை வைக்காமல் வெளிநாடுகளில் நம்பிக்கை வைத்ததன் விளைவையே கடந்த 30 வருடங்களாக நாடு அனுபவித்தது. அதேபோன்ற செயற்பாடுகளை கூட்டமைப்பினர் தற்போதும் மேற்கொள்ள முயற்சிப்பது கவலைக்குரிய விடயமாகும்.
எனவே அவ்வாறான அரசியலை தமிழ்க் கூட்டமைப்பினர் முன்னெடுக்காது புதிய அரசியல் கலாசாரத்தின் ஊடாக மக்களின் தேவைகளை நிறைவேற்றி பயணிக்க முன்வரவேண்டும். வடக்கின் அபிவிருத்திப் பயணத்தை தடுக்க கூட்டமைப்பினர் முயற்சிக்கக்கூடாது. சர்வதேசத்தில் பொய்ப்பிரசாரங்களை செய்யக்கூடாது என்றார்.

No comments:
Post a Comment