Thursday, August 22, 2013

எல்லை மீறும் சீனாவுடன் மல்லுக்கட்டும் இந்தியா - சிறப்பு பார்வை!

Thursday, August 22, 2013
சென்னை::இந்தியாவும் எல்லைத் தகராறுகளும்’ ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் போல் பிரிக்க முடியாத பெரும் பிரச்சினையாகிவிட்டது. ஒருபுறம், பரம விரோதியாக நினைக்கும் பாகிஸ்தான் ராணுவத்துடன் இந்திய வீரர்கள் இரவு பகலாக மல்லுக்கட்ட வேண்டியிருக்கிறது. மற்றொரு புறம், மறைமுக போர் நடத்தி வரும் சீனப் படைகளின் சில்மிஷங்களை சமாளிக்க பகீரத பிரயத்தனம் செய்ய வேண்டியுள்ளது.

இந்தியாவுடன் 4000 கிலோ மீட்டர் நீளத்திற்கும் அதிகமான எல்லைக் கோட்டை கொண்டுள்ள சீனா, இந்தியாவின் ஒரு அங்கமான அருணாச்சல பிரதேதசத்தின் சில பகுதிகளை காலம்காலமாக சொந்தம் கொண்டாடி வருகிறது. எல்லை கட்டுப்பாட்டு கோட்டை மதிப்பிடுவதில் பிரச்சினை உள்ளதால், பேச்சுவார்த்தைளில் நிலையான தீர்வு எட்டப்படவில்லை.

எல்லைப் பிரச்சனைக்காக 1962-ம் ஆண்டு இந்தியா-சீன படைகள் ஆக்ரோஷமாக மோதிக்கொண்டன. எல்லைப் பிரச்சினை மட்டுமே இந்த போருக்கு காரணமாக கருதப்பட்டாலும், திபெத் பகுதியை சீனப் படைகள் ஆக்கிரமித்தது உள்ளிட்ட வேறு சில காரணங்களும் இதன் பின்னணியில் இருந்தன. திபெத் புரட்சிக்குப் பிறகு, சீனாவின் அதிகார வரம்பிற்குள் வர மறுத்த தலாய் லாமாவிற்கு இந்தியா அடைக்கலம் கொடுத்ததும் சீனாவின் ஆத்திரத்தை தூண்டிவிட்டது.

எல்லையைக் கடந்து முன்னேறி தாக்குதல் நடத்திய சீனா, பல பகுதிகளை கைப்பற்றியது. ஒரு மாதம் நடந்த இந்த போரை முடிவுக்கு கொண்டு வருவதாக அறிவித்த சீனா, பின்னர் தனது படைகளையும் பழைய நிலைக்கு கொண்டு சென்றதால் அமைதி ஏற்பட்டது. அப்போது எல்லையில் எந்த மாற்றமும் நிகழாவிட்டாலும், போருக்குப் பின்னர் இந்தியாவின் மீது சீனா மறைமுக போரை நடத்தி வருகிறது.

பல பகுதிகளை தந்திரமாக தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. மோதல் போக்கு நீடித்ததால் இருநாட்டு உறவில் முன்னேற்றம் ஏற்படவும் வழியில்லாமல் போனது. இந்த பிரச்சனையின் உச்சகட்டமாக கடந்த மே மதம் இந்தியா-சீனா எல்லையில் உள்ள லடாக் பகுதியில் ஊடுருவிய சீனப் படைகள் அங்கு முகாமிட்டு வெளியேற மறுத்தது. இந்த அத்துமீறலை அடுத்து இரு நாடுகளிடையே நல்லுறவில் முரண்பாடு நிலவி போர்மேகம் சூழ்ந்தது. சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஊடுருவி இந்தியாவை சீண்டிய சீன படைகளுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினாலும், எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செயல்படுவது அழகல்ல என்ற பாணியில் மத்திய அரசு காய் நகர்த்தியது.

வெளியுறவு மந்திரி சல்மான் குர்ஷித், சீனா சென்று பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். அதேசமயம் சீன பிரதமர் லீ கெகியாங் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பேச்சுவார்த்தைக்கு வழி ஏற்படுத்தி கொடுத்தார். அதன்பின்னர் ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டது. சீன படைகளும் தங்கள் கூடாரங்களை காலி செய்து திரும்பினர். ஆனாலும் சீனாவின் அச்சுறுத்தல் போக்கு குறையவில்லை.

எல்லையை பாதுகாக்கும் விஷயத்தில் அதிக அக்கறை கொண்டுள்ள மத்திய அரசு, சீனாவின் அச்சுறுத்தலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, லடாக் எல்லை அருகே, உலகின் மிக உயரமான ஓடுதளமாக கருதப்படும் தவுலத் பெக் ஓல்டி விமான ஓடுதளத்தில் மிகப்பெரிய விமானப்படை விமானத்தை தரையிறக்கியது. இதன்மூலம் அதிக அளவிலான துருப்புகளை எல்லையில் நிலைநிறுத்த முடியும் என்பதை உலகிற்கு பறைசாற்றியது. அதேசமயம் இந்திய கடற்படையின் விமானந்தாங்கி கப்பல் என்.என்.எஸ். விக்ராந்த், சீனாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் என்று சீனாவில் உள்ள ஒரு பத்திரிகையே கூறியிருக்கிறது.

காஷ்மீரில் இந்த நிலை என்றால், பிரச்சினைக்குரிய அருணாசல பிரதேச எல்லையிலும் சீனா தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட அவ்வப்போது அத்துமீறுகிறது. கடந்த 13-ம் தேதி சக்லகாம் பகுதியில் ஊடுருவிய சீன வீரர்கள், நாட்களுக்கும் மேலாக தங்கியிருக்கிறார்கள். இந்திய படையினர் தடுத்து பேனர்களை காட்டியபின்னர், திரும்பி சென்றிருக்கிறார்கள். கடந்த 18 மாதங்களில் இந்திய எல்லைக்குள் சீனப் படையினர் சுமார் 150 முறை ஊடுருவியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுபோன்று இரு நாட்டு வீரர்களும் எல்லை தாண்டுவதும், பின்னர் திரும்பி வருவதும் வாடிக்கைதான் என்று ராணுவத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டாலும், இது தேவையற்ற பதட்டத்தையே ஏற்படுத்தும் என்பதே உண்மை. இவ்வளவு கசப்பான உணர்வுகளை உள்ளுக்குள் வைத்திருந்தாலும், எல்லையில் சம்பிரதாயத்திற்கு நடத்தப்படும் சந்திப்பின்போது மட்டும், இருநாட்டு வீரர்களும் ஒருவரையொருவர் கைகுலுக்கி மகிழ்வது ஆறுதல் அளிக்கிறது.

இந்த நிகழ்வானது, சர்ச்சைக்குரிய அனைத்து எல்லைப் பகுதிகளிலும் அரங்கேற வேண்டும். அவ்வாறு நடந்தால் பசுமரத்தாணி போல் பதிந்திருக்கும் பகைமை உணர்வு குறைந்து, வலுவான உறவுக்கு வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை.
tamil matrimony_INNER_468x60.gif

No comments:

Post a Comment