Sunday, August 18, 2013

புலிகளுக்கு எதிரான இறுதிக் கட்ட யுத்தத்தின் போது 40000 பேர் கொல்லப்பட்டதாக சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரங்கள் இருந்தால் சமர்ப்பிக்கவும்: கோதபாய ராஜபக்ஷ!

Sunday, August 18, 2013
இலங்கை::புலிகளுக்கு எதிரான இறுதிக் கட்ட யுத்தத்தின் போது 40000 பேர் கொல்லப்பட்டதாக சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரங்கள் இருந்தால் சமர்ப்பிக்குமாறு பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ, ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு சவால் விடுத்துள்ளார்.
 
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வரும் ஐக்கிய நாடுகள் அமைப்பு உள்ளிட்ட எந்தவொரு தரப்பினரும், குற்றச்சாட்டுக்களுக்கான அடிப்படையை இதுவரையில் வெளிப்படுத்தவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
 
இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையிடம் இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் விளக்கம் அளிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
 
ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலளார் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட விசேட நிபுணர்கள் குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கக் கூடிய சான்றுகளை கால தாமதமின்றி வெளிப்படுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
 
காணாமல் போனவர்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள போதிலும், அதற்கான தரவு மூலங்களை இருபது ஆண்டுகளுக்கு பின்னரே வெளியிடப் போவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் நிபுணர்கள் குழு குறிப்பிட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். இந்த நிபந்தனையை உலகின் எந்த நாடாவாது ஏற்றுக்கொள்ளுமாறு என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
தாரூஸ்மான் தலைமையிலான ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக்கையில் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது 40000 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. யுத்தத்தின் போது உயிரிழந்த மற்றும் காணாமல் போனோர் தொடர்பில் அரசாங்கம் முழு அளவிலான மதிப்பீடு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது புலி உறுப்பினர்கள் உள்ளிட்ட 7400 பேர் உயிரிழந்ததுடன், 2600 காணாமல் போயுள்ளதாக கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். காணாமல் போனோர் தொடர்பான 1600 சம்பவங்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
 
438 காணாமல் போதல் சம்பவங்களே இராணுவக் கட்டுப்பாட்டு வலயத்தில் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அதிலும் 28 காணாமல் போதல் சம்பவங்களே நேரடியாக இராணுவத்தினர் மீது குற்றம் சுமத்தப்பட்டவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
சர்வதேச சமூகத்தின் ஒரு தரப்பினர் இலங்கை மீது பல்வேறு வழிகளில் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.புலிகளுடன் இரகசியமாக பேணிய உறவுகளை ஐக்கிய நாடுகள் அமைப்பு அம்பலப்படுத்தவே இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment