Monday, July 29, 2013

வட மாகாணத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட எந்தவொரு நிதியும் வீண் விரயம் செய்யப்படவில்லை: ஜி. ஏ. சந்திரசிறி!

Monday, July 29, 2013
இலங்கை::அபிவிருத்தி மற்றும் மக்களின் நலன் திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட சகல நிதிகளும் மக்கள் பயன்படும் வகையில் முழுமையாக செலவு செய்யப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார். எந்த ஒரு மாகாண சபைகளும் செய்யாத அளவுக்கு ஆளுநருக்கு உட்பட்ட அங்கீகாரத்தின் மூலம் தற்துணிவோடு மக்கள் நலன் சார்ந்த பல்வேறு பாரிய செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
 
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வட மாகாணத்தை துரதமாக மீளக்கட்டியெழுப்ப அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதுடன், இந்த மாகாணத்தில் வாழும் அப்பாவி மக்களின் நலன் கருதி வடக்கின் வசந்தம் வேலைத்திட்டம் மற்றும் வட மாகாண சபையின் ஊடாக கடந்த நான்கு ஆண்டு காலப் பகுதிக்குள் சுமார் 2000 பில்லியன் ரூபா செலவில் பல்வேறு பாரிய அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றார்.
 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையிலான அரசாங்கத்தின் ஊடாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் வழிகாட்டலில் வட பகுதி மக்களின் நலனை கருத்திற்கொண்டு கல்வி, சுகாதார, விவசாய, கலை, கலாசார, நீர்ப்பாசன, கடற்றொழில், புனர்வாழ்வு, புனரமைப்பு, மீள்குடியேற்றம், வாழ்வாதார, பொருளாதார, மின்சார, வீதி, போக்குவரத்து போன்ற பல்வேறு துறை பாரிய அபிவிருத்தி திட்டங்களுக்கு மேற்படி 2000 பில்லியன் ரூபா நிதியும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் கடந்த நான்கு ஆண்டுகால பகுதிக்குள் சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமான வட பகுதி இளைஞர், யுவதிகளுக்கு அரச துறையில் தொழில் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.
 
மாகாண சபை மற்றும் மத்திய அரசின் ஊடாக சமுர்த்தி, கல்வி, சுகாதார, நீர்ப்பாசன போன்ற பல்வேறு துறைகளில் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.
 
கடந்த 30 வருடங்களுக்கு பிறகு கடந்த நான்கு ஆண்டுகளாக வடக்கில் மிகவும் அமைதியான சூழல் காணப்படுவதுடன், மக்கள் நிம்மதியாகவும், சுதந்திரமாகவும் வாழ்ந்து வருகின்றனர். அத்துடன் வட மாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களிலும் வாழ்கின்ற மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
 
வட மாகாண நிதியை பயன்படுத்தி எந்த ஒருவரும் வெளிநாட்டு பயணங் களையோ, வீணான செலவுகளையோ கடந்த நான்கு ஆண்டு காலப் பகுதிக்குள் மேற்கொள்ளவில்லை என்பதை மாகாண ஆளுநர் என்ற வகையில் பொறுப்புடன் கூறிக்கொள்வதாக அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
 
வீணான செலவுகள் மேற்கொள்ளப் படாததனால் சகல நிதிகளும் வடபகுதி மக்களுக்கே முற்றுமுழுதாக பயன்படுத் தப்பட்டுள்ளது என்றும் அவர் உறுதியாக தெரிவித்தார்.
 
யுத்தத்தின் போதும் வட பகுதி மக்களுக்கான சகல வசதிகளையும் செய்து கொடுத்த அரசாங்கம் யுத்தத்திற்கு பின்ன ரும் கூடுதல் கரிசனையுடன் தொடர்ந்தும் செயற்பட்டு வந்ததாகவும் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை வட மாகாணத்திலுள்ள சுமார் 3500 மாணவ, மாணவிகளுக்கு தமது கல்வி நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொள்ளும் வகையில் ஒரு வருட கால புலமைப் பரிசில் வழங்கும் திட்டத்தை தான் முதற் தடவையாக அறிமுகம் செய்துள்ளதாக தெரிவித்த அவர், இதற்கான ஆளுநரின் நிதியிலிருந்து 35 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
 
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய ஐந்து மாவட்டங்களிலிருந்தும் தலா 500 பேர் வீதம் 2500 மாணவர்களும், மீள்குடியேற்றப்பட்ட மணலாறு மற்றும் தீவு பகுதிகளிலிருந்து தலா 500 பேர் என்ற வீதத்தில் 1000 மாணவர்களும் இந்த புலமைப் பரிசில் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
 
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 1500 மாணவர்களுக்கு இந்த புலமைப் பரிசில் வழங்கப்பட்டுள்ளதுடன், எஞ்சிய மாண வர்களுக்கு அடுத்த மாதம் 15 ஆம் திகதி க்கு முன்னர் வழங்கப்படும் என்றும் ஆளுநர் சந்திரசிறி சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment