Monday, July 15, 2013

13 ஆவது உடன்படிக்கை உருவாகக் காரணமாயிருந்த ஜே.ஆரும் -ராஜீவ் காந்தியும் இன்று உயிரோடு இல்லை. எனவே, அதனை தொடர்ந்து பாதுகாப்பதில் எந்த விதமான அர்த்தமும் கிடையாது:அத்தே ஞானசார தேரர்!

Monday, July 15, 2013
இலங்கை::இலங்கைக்கு எதிராக இந்தியாவின் அழுத்தமும் அச்சுறுத்தலும் எதிர்காலத்தில் பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்துமென்ற எச்சரிக்கையை பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் விடுத்துள்ளார். 
 
எனவே, நாட்டுக்காக எதிர்கட்சிகள் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்க வேண்டுமென்றும் தேரர் தெரிவித்தார்.
இது தொடர்பாக ஞானசார தேரர் மேலும் தெளிவு படுத்துகையில்,
13 ஆவது உடன்படிக்கை உருவாகக் காரணமாயிருந்த ஜே.ஆரும் -ராஜீவ் காந்தியும் இன்று உயிரோடு இல்லை. எனவே, அதனை தொடர்ந்து பாதுகாப்பதில் எந்த விதமான அர்த்தமும் கிடையாது.
எனவே, அதனை முழுமையாக ஒழித்துவிட வேண்டும். அதன் மூலம் நாட்டுக்கு எந்தவிதமான நன்மையும் இல்லை.
 
வடமாகாண சபை தேர்தலுக்கு முன்பு பொலிஸ், காணி அதிகாரங்களை இரத்துச் செய்ய வேண்டுமென்றும் பாராளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்பட வேண்டுமென்றும் அரசைக் கோரினோம்.
அதற்கமைய அரசாங்கம் பாராளுமன்றத் தெரிவுக்குழுவை அமைத்துள்ளது. எனவே, எதிர்க்கட்சிகள் தெரிவுக்குழுவில் கலந்து கொள்ள வேண்டும். இது அவர்களது கடப்பாடாகும். அரசாங்கத்திற்காகவல்ல, நாட்டுக்காக இக்குழுவில் பங்குகொள்ள வேண்டும். இதற்காக நாம் எதிர்கட்சிகளை வலியுறுத்துவோம். 
 
அதேவேளை அரசாங்கமும் 13 தொடர்பில் பிழை செய்துவிட்டது. ஆரம்பத்திலேயே அரசுக்குள்ள மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பயன்டுத்தி இதனை ஒழித்திருக்க வேண்டும். இப்பெரும்பான்மை இருப்பது நாட்டுக்குத் தேவையில்லாதவற்றை ஒழிப்பதற்கே தவிர விறகு வெட்டுவதற்காக அல்ல.
 
16 ஆவது நூற்றாண்டு காலம் தொடக்கம் இந்தியா எமக்கு எதிரான நாடாகும். எமது நாட்டை பல முறை ஆக்கிரமித்தது.
எனவே, இன்று சிவ்சங்கர் மேனனின் வருகையும் இந்தியாவின் அச்சுறுத்தலும் அழுத்தமும் பயங்கரமானது.
எந்த நேரத்திலும் எமது நாட்டுக்கு எதிரான செயற்பாட்டை இந்தியா எடுக்கலாம். எனவே, எதிர்கட்சிகள் நாட்டை பாதுகாக்க தெரிவுக் குழுவில் பங்குகொள்ள வேணடுமென்றும் தேரர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment