Thursday, June 27, 2013
இலங்கை::பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அரச தரப்பில் உள்ள எல்லாக் கட்சிகளுக்கும் வாய்ப்பளிக்க முடியாது.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இடம்பெற்றுள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், லங்கா சமசமாசக் கட்சி ஆகியவற்றுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. என அமைச்சரும், அரசியலமைப்புத் திருத்தங்கள் தொடர்பான ஆராய நியமிக்கப்பட்டுள்ள தெரிவுக்குழுவின் தலைவருமான நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, 31 பேர் கொண்ட பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அரசதரப்பில் 19 பேர் மட்டுமே இடம்பெற முடியும். சபாநாயகர் சமல் ராஜபக்சவின் விருப்பப்படியே அவர்கள் தெரிவு செய்யப்பட்டனர். அரசில் பெரும் எண்ணிக்கையான கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. அவை எல்லாம் தெரிவுக்குழுவுக்கு நியமிக்கப்படவில்லை. அது நடைமுறைச் சாத்தியமில்லை.
ஆனால் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் எல்லாக் கட்சிகளுக்கும், தெரிவுக்குழுவில் பிரதிநிதித்துவம் செய்யவும், யோசனைகளை சமர்ப்பிக்கவும் சந்தர்ப்பம் வழங்கப்படும்.
தெரிவுக்குழுவின் முதலாவது கூட்டம் வரும் ஜுலை 9ஆம் திகதி பாராளுமன்றக் கட்டத்தொகுதியில் நடைபெறும். அதில் தெரிவுக்குழுவின் நிகழ்ச்சி அட்டவணை தயாரிக்கப்படும்.
ஐதேக, ஜேவிபி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பன, இன்னமும் தெரிவுக்குழுவுக்கான பிரதிநிதிகளை நியமிக்கவில்லை. அவர்கள் தமது பிரதிநிதிகளை நியமிக்காது போனாலும், குறிப்பிட்ட நாளில் தெரிவுக்குழு செயற்படத் தொடங்கும். ஜுலை 9ஆம் திகதிக்குப் பின்னர், தெரிவுக்குழுவுக்கு பிரதிநிதிகளை நியமிக்க அனுமதி வழங்கப்படமாட்டாது. என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment